ஷிஜு தமீன்ஸ் பிலிம் பேக்டரி தயாரிக்க, ஷியாம் – ப்ரவீன் இரட்டையர்கள் இயக்கத்தில் வெற்றி நாயகனாக நடித்து, நாளை ( மார்ச் 10) திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் மெமரீஸ்.
படத்தின் ஆரம்பமே அதிர்ச்சிதான். மருத்துவமனை போன்ற பாழடைந்த கட்டிடத்தில் சிகிச்சை பெற்று வரும் ஒருவன் விழிப்பு வந்து எழுந்திருக்கிறான். அவனுக்கு தான் யார் என்பதே மறந்துவிட்டது.
அப்போது மருத்துவர் ஒருவர் வருகிறார்.. தான் யார் என அவரிடம் கேட்கிறான் அந்த இளைஞனர், அவரோ பதில் சொல்லவில்லை.. இதற்கிடையில் அந்த இளைஞன் கொலைக்குற்றவாளி என தினசரி ஒன்றில் செய்தி வந்திருக்கிறது.
இப்படி ஆரம்பத்திலேயே அதிரடி திருப்பங்கள்.
படத்தின் நாயகன் வெற்றி, அசத்தி இருக்கிறார். பொதுவாக சிலர், ‘ஒரே மாதிரி நடிக்கிறார்’ என்ற விமர்சனத்தை அவர் மீது வைப்பது உண்டு.
இந்தப் படத்தில் அதை உடைத்திருக்கிறார். அறிமுகக் காட்சியிலேயே அசத்துகிறார். கண்கள், உதடுகள் துடிக்க அவர் பேசுமும் முறை ஈர்க்கிறது. தான் யார் என்று அறியாமல் குழம்புவது, காவல் அதிகாரியாக துப்பறிவது, அந்த பெண்ணிடம் தன் காதலைச் சொல்வது, காதல் தோல்வியில் துவள்வது, அதன் பின் எடுக்கும் அதிரடி முடிவு.. ஒவ்வொன்றிலும் காட்சிககேற்ற முகபானைகளை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார் வெற்றி.அவரது திரையுலக பயணத்தில், மெமரிஸ் படம் என்றும் நினைவில் இருக்கும்.
பார்வதி அருண், ரமேஷ் திலக் உள்ளிட்ட அனைவருமே தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
வசனம் அஜயன் பாலா. எங்கும் துருத்தி நிர்காமல், ஸ்ருதியோடு இணைந்த பாடல் போல, படத்துடன் ஒட்டியே செல்லும் இயல்பான வசனம். பாராட்டுகள்.
கவாஸ்கர் அவினாஷ் இசை படத்துக்கு பலம். ஒளிப்பதிவு சிறப்பு. அந்த மலைப்பகுதி.. அதில் செல்லும் கார், பாழடைந்த கட்டிடம் என அத்தனை இடங்களையும் லைவ் ரிலே போல் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ஷியாம் – ப்ரவீன் இரட்டை இயக்குநர்கள் மிரட்டி இருக்கிறார்கள். கதை.. கதைக்குள் கதை.. கதைக்குள் கதைக்குள் கதை.. இப்படி அடுக்கிக்கொண்டே சென்றாலும், குழப்பம் இன்றி திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள்.சொல்லப்போனால், படத்தின் ஆரம்பத்தில் இருந்தே கிளைமாக்ஸ்தான். ஒவ்வொரு கிளைமாக்ஸும் முந்தைய கிளைமாக்ஸை தாண்டி நிற்கிறது.
மொத்தத்தில் வித்தியாசமான, அதிர வைக்கும் த்ரில்லர்.