மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியதன் மூலம், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படமான கூலியை இயக்கி வருகிறார். அதே நேரத்தில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.

இவை மட்டுமின்றி, லோகேஷ் கனகராஜ் துவக்கியுள்ள சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனும் ‘எல்.சி.யு’ என்ற கான்செப்டின் கீழ் பல திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் வருகிறார். அவர் இயக்கிய கைதி, விக்ரம், லியோ ஆகிய திரைப்படங்களும், தயாரித்து வரும் பென்ஸ் படமும் இந்த எல்.சி.யு யில் அடங்கும். அடுத்ததாக லோகேஷ் கைதி 2 மற்றும் ரோலக்ஸ் ஆகிய திரைப்படங்களை இயக்க உள்ளார்.

இந்த நிலையிலேயே, எல்.சி.யு யில் பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரண் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் மூன்று படங்களை இயக்க உள்ளதாகவும், அந்த மூன்று படங்களில் ஒன்று ராம் சரண் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள இரண்டு படங்கள் கைதி 2 மற்றும் ரோலக்ஸ் எனத் தெரிகிறது. ஆனால் இதுகுறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. அனைத்தும் வெறும் வதந்திகளாக உலாவருகின்றன.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான ராம் சரண் தற்போது கேம் சேஞ்சர் படத்தைத் தொடர்ந்து தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக RC 16 என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரணுடன் ஜான்வி கபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.