Friday, April 12, 2024

“நீங்க கம்யூனிஸ்ட்டா..?” – இயக்குநர் திருச்செல்வத்திடம் கேள்வி கேட்ட ரஜினி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை இயக்குநரும், கதாசிரியருமான திருச்செல்வம் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து கதை சொன்ன சுவாரஸ்யமான சம்பவத்தை தற்போது வெளியில் சொல்லியிருக்கிறார்.

“கோலங்கள்’ சீரியல் முடிந்த பிறகு ரஜினி ஸாரை சந்திப்பதற்காக ராகவேந்திரா மண்டபத்திற்கு ஒரு நாள் சென்றிருந்தேன். நட்ராஜ் ஸார்தான் இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

நான் அங்கே காத்திருந்த நேரத்தில் அவருடைய மனைவி லதா இஸபெல் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சேர்க்கப்பட்டிருந்தார். “ரஜினி ஸார், இஸபெல் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு இங்கே வருவதால் அவர் வருவதற்கு 15 நிமிடங்கள் தாமதமாகும்…” என்று என்னிடம் வந்து சொன்னார்கள். இதுவே, எனக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

15 நிமிடத்தில் ரஜினி மண்டபத்திற்கு வந்தார். நானும், நட்ராஜ் ஸாரும் அவர் இருந்த அறைக்குள் போனோம். அந்த அறைக்குள் நான் இருந்த 40 நிமிடங்களும் ரஜினி ஸார் என்னிடம் மட்டுமே பேசினார். என்னப் பற்றி மட்டுமே கேள்வி கேட்டார்.

முதலில் சில நொடிகள் எதுவும் பேசாமல் என்னை ஊடுறுவி பார்த்தார். பின்பு மெதுவாக “எத்தனை எபிசோடுகள்…?” என்றார். “1500 எபிசோடுகள் ஸார்…” என்றேன். “முடிஞ்சிருச்சா…?” என்றார். “ஆமாம் ஸார்.. முடிஞ்சிருச்சு…” என்றேன்.

“எப்படி.. எப்படி செஞ்சீங்க.. நீங்களே கதை, திரைக்கதை எழுதி, நடிச்சு டைரக்ஷனும் செஞ்சு.. எப்படி முடிஞ்சது…?” என்றார் ஆச்சரியத்துடன்..! “ஸார்.. எங்களைவிட நீங்கதான் ஸார்.. சினிமால ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கீங்க…?” என்றேன்..

“நோ.. நோ.. நான் சினிமால நடிக்க வெளியூர் போறேன். பைவ் ஸ்டார் ஹோட்டல்ல தங்குறேன். காலைல பெல் அடிச்சு ஒருத்தங்க எழுப்பி விடுறாங்க. குளிச்சு, முடிச்சு ரெடியாகி வந்தா கீழ கார் ரெடியா இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனா டயலாக் பேப்பர் ரெடியா இருக்கு. ஒருத்தர் வசனத்தைச் சொல்லித் தர்றாரு. டைரக்டர் அப்படி, இப்படி நடிக்கணும்ன்னு சொல்றாரு. நடிக்கிறோம். சாப்பிடுறோம். கிளம்பி வர்றோம்.. இதுல என்ன கஷ்டம்.. ஆனால் உங்களை மாதிரியா.. நீங்களே எல்லாத்தையும் ரெடி பண்ணி வைச்சிட்டு இயக்கமும் செஞ்சிட்டு.. பெரிய விஷயம்..” என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார். அவர் சொன்னதைக் கேட்டுத் திகைத்துப் போனேன்.

அதன் பிறகு அந்த சீரியலில் நடித்த நடிகர், நடிகைகள் பற்றிக் கேட்டார். நானும் சொன்னேன். திடீரென்று “நீங்க கம்யூனிஸ்ட்டா..?” என்றார். அவருடைய இந்தக் கேள்வியும் எனக்கு ஷாக்காக இருந்தது. எதுக்காக இந்தக் கேள்வியைக் கேட்டாருன்னு எனக்கு முதல்ல புரியலை..

“இல்ல. அதுல ஒரு கேரக்டர் வைச்சிருந்தீங்க. எனக்கு ரொம்பப் புடிச்சிருந்தது. அதான் கேட்டேன்…” என்றார். “இல்ல ஸார். நான் தீவிர கடவுள் பக்தியுள்ளவன். கம்யூனிஸத்துல சிலவை பிடிக்கும். அதுனாலதான் அந்தக் கேரக்டரை உருவாக்கினேன்…” என்றேன்.

“கதையெல்லாம் எழுதியிருக்கீங்களா..?” என்றார். திடுதிப்புன்னு கேட்டவுடனே எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. அந்தச் சமயத்துல நாயகியை மையப்படுத்திய ஒரு கதையை உருவாக்கி வைச்சிருந்தேன். “ஒரு கதை இருக்கு ஸார்.. ஆனால், அது ஹீரோயின் சப்ஜெக்ட்..” என்றேன். “பரவாயில்லை.. சொல்லுங்க…” என்றார். நானும் அதை சுருக்கமா சொல்லி முடிச்சேன்.

“வேற ஏதாவது கதை இருக்கா..?” என்றார். அப்போது அவருக்கேற்ற ஒரு கதை என்னிடம் ஏற்கெனவே இருந்தது. சட்டென்று அது என் நினைவுக்கு வராமல் போய்விட்டது. “இப்ப இல்ல ஸார்.. ரெடி பண்ணணும்” என்றேன்.

அப்புறம் அங்கேயே இருக்கும் புகைப்படக்காரரை அழைத்து போட்டோ எடுக்கச் சொன்னார். அந்தப் புகைப்படமும் மூன்றுவித பிரேம்களில் என் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் ரஜினி ஸார்..

அன்றைக்கு அவர் ஆர்வத்துடன் கதை கேட்டவிதத்தை என்னால் சட்டென்று உணர முடியவில்லை. ஒரு வேளை நான் முன்னரே தயார் செய்து வைத்திருந்த அந்தக் கதையைச் சொல்லியிருந்தால் நிச்சயமாக நான் அவருடைய படத்தில் ஒரு கதாசிரியராகக்கூட அறிமுகமாயிருப்பேன். அந்த வாய்ப்பு மயிரிழையில் போய்விட்டதில் இப்போதுவரையில் எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது” என்று சொல்கிறார் இயக்குநர் திருச்செல்வம்.

- Advertisement -

Read more

Local News