மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வெளியில் வரும் புகைப்படங்கள் நேற்று வெளியானது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ரஜினிகாந்த். பின்னர் அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சமீபத்தில் மீண்டும் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆண்டுக்கொரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பதால் ரஜினி சீக்கிரமாக மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
இதனால் ‘அண்ணாத்த’ படத்தில் தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பிய அவர், கடந்த 19-ம் தேதி இரவில் அமெரிக்காவுக்குப் புறப்பட்டு சென்றார்.

அமெரிக்காவில் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள ராச்செஸ்டர் என்ற நகரத்தில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற மாயோ மருத்துவமனையில்தான் ரஜினிகாந்திற்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
தற்போதும் அதே மருத்துவமனைக்கு பரிசோதனைகளுக்காக ரஜினி சென்றிருக்கிறார். அந்த மருத்துவமனையில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அப்போது ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா இருவரும் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் புகைப்படத்தை யாரோ ஒருவர் எடுத்து இணையத்தில் வெளியிட நேற்று அது வைரலாகப் பரவியது.
ரஜினி மேலும் சில நாட்கள் அங்கே தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.