‘பாட்ஷா’, ‘வீரா’, ‘சத்யா’, ‘அண்ணாமலை’ போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா, ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சின்னத்திரைக்கு மாறியிருந்தார். தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ளார், படத்தின் பெயர் ‘சாருகேசி’. இசை சார்ந்த கதை அமைப்பில், இதில் சத்யராஜ், சமுத்திரகனி, சுஹாசினி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ‘சிந்து பைரவி’, ‘சங்கராபரணம்’ பாணியில் உருவாகும் இப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் கர்நாடக சங்கீத பாடகராக நடித்துள்ளார். இவர் நடித்த ‘சாருகேசி’ என்ற மேடை நாடகமே இப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுரேஷ்கிருஷ்ணா கூறுகையில், “ரஜினி சார் இந்த நாடகத்தை பார்த்தபின் இதை படம் ஆக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி, நானும் ஒப்புக்கொண்டு இந்தப் படத்தை உருவாக்கினோம். சாருகேசி நாடகத்தை பார்த்த இரு நாள்களில் திரைக்கதை எழுதி விட்டேன். இசையமைப்பாளராக தேவாவை உடனடியாக ஒப்பந்தம் செய்தோம். இந்தப் படத்தில் சங்கர் மகாதேவன் பாடிய பாடலுக்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்பது உறுதி. தேவா இசை அமைத்தவுடனே, பா.விஜய் உடனே பாடல் வரிகளை எழுதியார். அதேபோல, வசனங்களும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.
பா.விஜய்யை சமுத்திரகனி, சத்யராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர். சத்யராஜ் ஒரு படத்தை பார்த்து அழுதது இதுதான் என நினைக்கிறேன். தலைவாசல் விஜய் சிறப்பாக நடித்துள்ளார். ரம்யா பாண்டியனின் நடிப்பும் பாராட்டுக்குரியது. ஒய்.ஜி.மகேந்திரன் இல்லையெனில் ‘சாருகேசி’ என்ற படம் எக்காலத்திலும் உருவாக முடியாது. நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்துகொண்டு, மிகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். 75 வயதிலும் இவ்வளவு நினைவாற்றலுடன், சுறுசுறுப்பாக இருப்பது மிகக் கவனிக்கத்தக்க விஷயம்,” எனக் கூறினார்.