மறைந்த கலைஞர்களில் பலருக்கும் பிடித்த நடிகர் வி.கே.ராமசாமி. சூப்பர் ஸ்டாரின் பெரும்பாலான படங்களில் வி.கே.ஆரைக் கட்டாயம் பார்க்கலாம்.
இவர்களின் நட்பு குறித்து, பத்திரிகையாளர் சங்கநாதான் கூறிய தகவல் நெகிழ்ச்சியானது.
“ஒரு முறை, வி.கே.ஆரை சந்தித்தேன். ‘கிட்டத்தட்ட ரஜினியோட எல்லாப் படங்கள்லயும் நடிச்சிருக்கீங்க… உங்க அனுபவத்தைச் சொல்லுங்க” என்றேன்..
உடனே அவர் சற்றே தடுமாறிபடி எழுந்தார்.
என்கூட கொஞ்சம் வாங்க என எங்கள் தோளைப் பிடித்தபடி தனது வீட்டுப் பூஜை அறைக்குக் கூட்டிச் சென்றார். அங்கு, ஏகப்பட்ட கடவுள் படங்கள், சின்னச் சின்னதாய் விக்ரகங்கள்.
அவற்றின் நடுவே… சூப்பர்ஸ்டாரின் படம்!
ஒருநிமிடம் ஆடிப்போய் விட்டேன். கண்களில் என்னையும் அறியாமல் நீர்க் கோர்த்துக் கொண்டது. வி.கே.ஆருக்கும்தான்.
என்னண்ணே இது ரஜினி படத்தை இங்க வச்சிருக்கீங்க…?, என்றேன்.
‘அதுக்குத் தகுதியானவர்தான்… வயசுல அவரு சின்னவரா இருந்தாலும் குணத்துல மகான். எப்பவோ ஒருமுறை… ஒரு பத்துப் பதினஞ்சு வருஷத்துக்கு முன்ன, அவர்கூட பிளைட்ல போறப்ப, எனக்கும் ஒரு படம் பண்ணித் தரணும்னு கேட்டுக்கிட்டேன் அவர்கிட்ட. அப்புறம் நானும் மறந்திட்டேன்.
ஒருநாள் பேப்பர்லதான் செய்தி படிச்சேன்… அருணாச்சலம்னு ஒரு படத்தை அவர் தயாரிக்கிறதாவும், அந்தப் படம் தயாரிக்கும் 8 பங்குதாரர்களில் நானும் ஒருத்தன்னும் நியூஸ் போட்டிருந்தாங்க. எனக்கு ஒண்ணும் தெரியல… அப்புறம் ரஜினியே போன்ல விஷயத்தைச் சொன்னாரு..
அந்தப் படத்துக்கு ஒரு தயாரிப்பாளரா நான் நயா பைசா கொடுக்கல… அவரும் என்கிட்ட இதப்பத்தி ஒண்ணும் கேக்கல.
படத்துல நானும் நடிச்சேன், வில்லனா. அப்பவே சொல்லிட்டேன், ரஜினிய திட்டற மாதிரி வசனம் ஏதும் வச்சிடாதீங்கன்னு.
படம் முடிஞ்சு பெரிய அளவில் ஓடுச்சி.. ஒருநாள் என்னைக் கூப்பிட்டிருந்தார் ரஜினி… ஒரு பெட்டில வச்சி ரூ.25 லட்சத்தை என்னோட பங்கா கொடுத்தாரு. அந்தப் படத்துல நடிச்சதுக்காக ஒரு பெரிய தொகையை தனியா கொடுத்தார்… இந்தக் காலத்துல இப்படியெல்லாம் உதவற குணம் யாருக்கு வரும்… சும்மா கொடுத்தா என் கவுரவத்துக்கு குறைச்சல்னு, ஒரு தயாரிப்பாளராக்கி உதவினாரு ரஜினி” என்ற வி.கே.ஆரின் கண்கள் கலங்கின” இவ்வாறு அந்த பத்திரிகையாளர் தெரிவித்து உள்ளார்.
–