பிரபல கதை,வசனகர்த்தாவாக விளங்கிய கிரேசி மோகன், அபூர்வ சகோதரர்கள் படத்தில்தான் திரைத்துறைக்குள் நுழைந்தார். அவரை திரைத்துறைக்கு அழைத்து வந்தவர் கமல்
பிறகு தொடர்ந்து கமலுடன் மகளிர் மட்டும் சதிலீலாவதி, இந்திரன் சந்திரன், அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம்,தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ்,போன்ற படங்களில் பணி புரிந்தார்.
இது குறித்து அவரது தம்பி பாலாஜி, ஒரு பேட்டியில், “அவ்வை சண்முகி படத்தின் வெற்றியை பார்த்து ரஜினிகாந்த் கிரேசி மோகனுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். ரஜினி தான் பேசுகிறார் என்பதை நம்பாத கிரேசி மோகன் சந்தேகத்துடனே, ‘நீங்கள் யார் பேசுகிறீர்கள்’ என்று மீண்டும் மீண்டும் கேட்டார். ரஜினிகாந்தும், ‘நான் ரஜினிகாந்த் தான் பேசுகிறேன்’ என்று பலமுறை சொன்ன பிறகு நம்பினார்.
அப்போது ரஜினி, ‘நாம் ஒரு படம் இணைந்து பண்ணுவோம்’ என்று அழைத்தார். ‘கமலிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் வருவேன்’ என்று நாசுக்காக சொல்லிவிட்டார் கிரேசி மோகன்.அதே போல மறுநாள் கமலிடம் சென்றார். அவரை உற்சாகமாக வரவேற்ற கமல், ‘ரஜினியுடன் படம் பண்ண போகிறீர்களா வாழ்த்துக்கள்’ என்று கூற மோகன் ஷாக்காகிவிட்டார்.
‘உங்களுக்கு எப்படி தெரியும்’ என கிரேசி மோகன் கேட்க.. ‘என்னிடம் கேட்டுவிட்டுத்தான் உங்களுக்குப் பேசினார் ரஜினி’ என்றார் கமல்.
கமலின் விருப்பத்துடன் கிரேசி மோகன் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றிய மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் அருணாச்சலம்” என்றார் பாலாஜி.