“ஹீரோவுக்கா தகுதிகள் என சொல்லப்பட்டவை எதுவும் இன்றி, தமிழில் நெம்பர் ஒன் ஆனார் ரஜினி” என அவரது நண்பர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் கன்னட நடிகருமான அசோக் என்பவர் ரஜினி குறித்து புத்தகம் எழுதி இருக்கிறார்.
ரஜினிகாந்த் சென்னை அடையாறு பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது அவருக்கு நண்பரானார் அசோக். இவர், ‘கெளயா சிவாஜி’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.
அதில், “சென்னை அடையாறு பிலிம் இன்ஸ்டியூட்டில் ரஜினியை முதன் முதலாக தான் சந்தித்த போது நெருங்கிய நண்பரானோம். அன்று முதல் இன்று வரை நட்புடன் இருக்கிறோம்.
ரஜினியுடனான நட்பு பள்ளி நாட்களில் இருந்த நட்பு போல் இருந்தது.
நான் கன்னடத்தில் துணை நடிகராக மாறிய போது ரஜினி இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார். ஆனாலும் எங்களுக்குள் நட்பு இன்னும் அப்படியே உள்ளது.
ரஜினி நடிக்க வந்த காலத்தில் அவருக்கு ஹீரோவாக அப்போது என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்ததோ, அந்தத் தகுதிகள் எதுவுமே அவரிடம் இல்லை. அதாவது, அவருடைய நிறம் மற்றும் கவர்ச்சி ஆகியவை ஹீரோவுக்கு தகுதியாக இல்லாமல் இருந்தது.
ஆனால் சினிமாவில் உள்ள அனைத்து மூட நம்பிக்கைகளையும் உடைத்து யாரும் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அவர் உச்சத்தில் இருக்கின்றார். நினைத்து பார்க்க முடியாத ஒரு அதிசயமாக தான் அவரை நான் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.