மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத்பாசில், உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
அந்தப் படத்தில் பகத்பாசில், சாதி வெறியராக நடித்து இருந்தார். அவர் நடித்த காட்சிகளை எடிட் செய்து, பின்னணியில் தங்கள் சாதிப்பெருமை பாடல்களை பதிந்து சமூகவலைதளத்தில் சிலர் பகிர்ந்தனர்.
இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, “மாமன்னன் படத்தில் ரத்னவேல் என்ற சாதி வெறியராக பகத்பாசில் சிறப்பாக நடித்து உள்ளார். அதே நேரம், அந்த ரத்தினவேல் கதாபாத்திர காட்சிகளை தவறான நோக்கத்துடன் சிலர் பயன்படுத்துகின்றனர். ஜாதி பிரிவினைகளையும், மோதல்களையும் தூண்டும் வகையில் மீம்ஸ் உருவாக்கி, சமூகவலைதளத்தில் பதிகின்றனர். இது சாதி மோதலை ஏற்படுத்த வழிவகுக்கும்.
ஆகவே, வீடியோக்களையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பகத் பாசிலே முன் வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இது அவருக்கு சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்திவிடும்” என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.