விக்ரம் பிரபு நடித்துள்ள ‘புலிக்குத்தி பாண்டி’ படம் வரும் பொங்கல் தினத்தன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
சன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘புலிக்குத்தி பாண்டி’. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ரகுநந்தன், சண்டை இயக்குநராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடித்தது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலேயே முழு படப்பிடிப்பும் நடத்தப்பட்டது.
இந்தப் படத்தை முதலில் ஜனவரி 1-ம் தேதி திரையரங்கில் வெளியிட்டுவிட்டு, 15-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பலாம் என முடிவு செய்திருந்தார்கள். ஆனால், படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் வரும் ஜனவரி 15, பொங்கல் தினத்தன்று மாலை 6.30 மணிக்கு நேரடியாக சன் டிவியில் இந்தப் படம் ஒளிபரப்பாக உள்ளது.
இதன் பின்பு ‘சன் நெக்ஸ்ட்’ ஓடிடி தளத்திலும் இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு ‘நாங்க ரொம்ப பிஸி’ படமும் இதே பாணியில் சன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு அதே தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.