Friday, April 12, 2024

யாஷிகா ஆனந்தால் கலங்கிப் போயிருக்கும் தயாரிப்பாளர்கள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த சனிக்கிழமையன்று இரவு மகாபலிபுரம் சாலையில்  நடந்த விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்துக்கு தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

யாஷிகாவின் இடுப்பிலும், கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாம். அதற்காக காலில் ஒரு ஆபரேஷன் நடந்துள்ளதாம். மேலும் சில ஆபரேஷன்கள் செய்தால்தான் அவரால் எழுந்து நடக்க முடியும் என்ற நிலைமையில் இருக்கிறாராம்.

இந்த நிலைமையில் யாஷிகா ஆனந்த் நடித்து வந்த படங்களின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது யாஷிகா ஆனந்த் ‘இவன்தான் உத்தமன்’, ‘ராஜ பீமா’, ‘கடமையை செய்’, ‘பாம்பாட்டம்’, ‘சல்பர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ‘இவன்தான் உத்தமன்’ திரைப்படம் முழுவதும் தயாராகிவிட்டது. இந்தப் படத்தின் 2 பாடல்கள்கூட வெளியாகிவிட்டது. சென்ற வருடமே வெளியாக தயாராகியிருந்தும் கொரோனா லாக் டவுன் காரணமாக தற்போதுவரையிலும் திரையிடப்பட முடியாமல் முடங்கிக் கிடக்கிறது.

‘ராஜ பீமா’ திரைப்படத்தில் யாஷிகா ஒரு கெஸ்ட் ரோல் மட்டுமே செய்திருக்கிறார். இந்தப் படமும் ரிலீஸுக்குத் தயாராகி நிற்கிறது.

‘பாம்பாட்டம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னமும் நடைபெற வேண்டியிருக்கிறது என்பதால் இதில் யாஷிகாவின் பங்களிப்பும் தேவை என்பதால் இந்தப் படம் யாஷிகாவுக்காக வெயிட்டிங்.

‘சல்பர்’  மற்றும் ‘கடமையைச் செய்’ ஆகிய படங்களில் தற்போது யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார். இதில் யாஷிகா நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னமும் இருக்கிறதாம்.

கடந்த வாரம்தான் ‘கடமையைச் செய்’ படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நடைபெற்றது. அவரும் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்தக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்தப் புகைப்படங்கள்கூட மீடியாக்களில் வெளியாகின.

இந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த விபத்து செய்தி இந்தப் படங்களின் தயாரிப்பாளர்களை பெரிதும் கலங்க வைத்துள்ளது. ஏனெனில் தற்போதைய நிலவரப்படி யாஷிகா ஆனந்த் எழுந்து நடக்கவே இன்னும் 6 மாதங்களாகும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அதன் பின்புகூட முன்புபோல ஓடியாடி, டூயட் காட்சிகள் நடனமாடியெல்லாம் அவரால் நடிக்க முடியாது. கொஞ்சம் சிரமங்கள் இருக்கலாம். இதனால் அவர் முழுமையாகக் குணமடையும்வரையிலும் காத்திருந்து படத்தை முடிப்பதாக இருந்தால் இன்னொரு வருட காலமாகும். அதுவரையிலும் உடன் நடிக்கும் நடிகர்களும் காத்திருக்க வேண்டும். அவர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கிறது.

தயாரிப்பாளர்களும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியாக வேண்டும். இயக்குநர்கள் பொறுமை காக்க வேண்டும். இது போன்ற பிரச்சினைகளால் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது குழம்பிப் போயிருக்கிறார்கள்.

ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே நடந்திருக்கிறது என்றால் யாஷிகா நடித்த காட்சிகளைத் தூக்கியெறிந்துவிட்டு வேறு நடிகையை வைத்து படமாக்கலாம். கடைசியில் இதுதான் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News