Saturday, April 13, 2024

“கியூப் கட்டணத்திற்கும், எங்களுக்கும் இனிமேல் சம்பந்தமே இல்லை…” – தயாரிப்பாளர் டி.சிவா விளக்கம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மூடப்பட்டிருக்கும் சினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது என்பது, வரும் திங்கட்கிழமை தெரிந்துவிடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்றைக்கு தமிழக முதல்வரை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் சந்திக்க இருக்கிறார்கள். அந்தச் சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உறுதியாகவே தெரிகிறது.

இந்த நேரத்தில் தியேட்டர்களை உடனடியாகத் திறந்தாலும் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்னும் கொள்கை முடிவில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியாகவே இருக்கிறது.

“கியூப்பின் கட்டணத்தை நாங்கள் கட்ட மாட்டோம்..”, “தியேட்டரில் வெளியிடப்படும் டிரெயிலருக்கான அனுமதிக் கட்டணத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும்” போன்ற சில கோரிக்கைகளை முன் வைத்து அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் கியூப் நிறுவனம் தனது கட்டணத் தொகையை பாதியாக குறைத்திருக்கிறது. அதிலும் வரும் டிசம்பர்வரையிலும்தான் இந்தச் சலுகை கடைப்பிடிக்கப்படும் என்றும் சொல்லியுள்ளது.

தமிழகத்தில் இருக்கும் தியேட்டர்களில் தற்போது திரையிடல் கட்டணமாக ஒரு காட்சிக்கு 250 ரூபாயை கியூப் நிறுவனம் வசூலித்து வருகிறது. இந்தத் தொகை இனிமேல் 125 ரூபாயாக இருக்கப் போகிறது. வாரத்திற்கு என்று பார்த்தால் ஒரு தியேட்டருக்கு 3,500 ரூபாயாக இருக்கும்.

இதன்படி ஒரு திரைப்படம் தமிழகம் முழுவதிலும் சுமாராக 100 ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டால், அதன் ஒரு வாரத்திற்கான திரையிடல் கட்டணமே 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.

“இந்தக் கட்டணக் குறைப்பு போதுமானதுதானா..?” என்பது குறித்து தமிழ்த் திரையுலக நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான அம்மா கிரியேஷன் டி.சிவாவிடம் கருத்து கேட்டபோது, “இதில் எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. நாங்கள் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டோம். இனிமேல் நாங்கள் ஒரு பைசாகூட திரையிடல் கட்டணமாக கட்ட மாட்டோம். இந்தக் கட்டணக் குறைப்பு என்பது கியூப் நிறுவனத்திற்கும், தியேட்டர்காரர்களுக்கும் இடையிலான பிரச்சினை. இதில் நாங்கள் என்ன கருத்து சொல்ல முடியும்..?

தியேட்டர்களை தற்போதைக்கு திறக்க அரசு உத்தரவிட்டாலும் நாங்கள் ஏற்கெனவே தெரிவித்ததுபோல எங்களது கோரிக்கைகள் நிறைவேறினால்தான், எங்களது சங்க உறுப்பினர்கள் தங்களது படங்களை வெளியிடுவார்கள். இல்லையெனில் வெளியாகாது.

தமிழக அரசு இது குறித்து எங்களை அழைத்துப் பேசினாலோ அல்லது முத்தரப்பு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தாலோ நிச்சயமாக நாங்கள் அதில் கலந்து கொள்வோம். ஆனால், கியூப் கட்டணம் என்பது இனிமேல் எங்களிடமிருந்து அந்த நிறுவனத்திற்குக் கிடைக்காது. இதுதான் எங்களது இறுதியான பதில்..” என்றார் உறுதியான குரலில்..!

- Advertisement -

Read more

Local News