Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“அஜீத் நல்ல மனிதரல்ல…” – கொதிக்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘தல’ என்று தமிழகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்அஜீத்தை “நல்ல மனிதரல்ல…” என்று சாடுகிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

“தன்னிடம் கடனாக பணத்தை வாங்கிவிட்டு வாங்கவே இல்லை என்று இன்றுவரை சாதித்து வருகிறார் அஜீத்…” என்று குற்றம் சாட்டுகிறார் மாணிக்கம் நாராயணன். அவர் இது பற்றி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில் இது குறித்து அவர் பேசும்போது, “அஜீத் நடிக்க வந்தபோதில் இருந்தே எனக்கு அவரை நன்றாகத் தெரியும். 1995-ம் ஆண்டில் ஒரு நாள் என்னிடத்தில் வந்து “என்னோட அப்பாவும், அம்மாவும் சிங்கப்பூர் போக வேண்டியிருக்கு. அதுக்காக ஆறு லட்சம் ரூபாய் பணம் வேண்டும்..” என்று கேட்டார்.

நானும் இல்லை என்று சொல்லிப் பழகாதவன். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் இருந்து 6 லட்சம் ரூபாய்க்கு டிராப்ட் எடுத்துக் கொடுத்தேன். அஜீத்தை வைத்து படம் செய்யலாம் என்றும் அப்போது எனக்கு ஒரு எண்ணம் இருந்தது.

1996-ம் ஆண்டில் ‘மாண்புமிகு மாணவன்’ என்ற படத்தைத் தயாரித்தேன். அது சரியாக ஓடவில்லை. எனக்கு நஷ்டமாகிவிட்டது. அப்போது அஜீத் அடிக்கடி என்னுடன் போனில் பேசுவார். அப்போது ஒரு நாள் அஜீத்திடம் நான் கால்ஷீட் கேட்டேன். அதற்கு அவர் “இப்ப வேணாம் ஸார். எனக்கு நேரம் நல்லாயில்ல.. ஆனால் சீக்கிரமா உங்களுக்கு கால்ஷீட் தரேன்…” என்றார். இந்தப் பேச்சு அப்படியே 1998-ம் வருடம் வரையிலும் சென்றது.

அப்போது வெடிமுத்து என்ற தயாரிப்பாளர் அஜீத்தை வைத்து ‘அவள் வருவாளா’ என்ற படத்தைத் தயாரித்தார். அந்தப் படம் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும் நிறைய பணச் சிக்கல்கள் வந்தன. அவர் என்னிடம் வந்து பணம் கேட்டார். நானும் ‘அஜீத் படம்தானே.. இது வெளியானால் அடுத்து நமக்கும் அவரது கால்ஷீட் கிடைக்குமே’ என்பதால் 12 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினேன்.

அந்த நேரம் அஜீத் எனக்கு போன் செய்து, “ஸார்.. நானும், நீங்களும் நல்ல நண்பர்கள். அப்படியே இனிமேலும் இருப்போம். அதுனால வெடிமுத்துவுக்கு இனிமேல் நீங்க பணம் தர வேண்டாம். அவர்கிட்ட கொடுத்தப் பணத்துக்காக நான் உங்களுக்கு கால்ஷீட் தரேன். இந்தப் படத்துக்கு பிரச்சினை எதுவும் செய்ய வேண்டாம்..” என்று சொன்னார்.

அதேபோல் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யும் எனக்கு போன் செய்து, “இந்தப் படத்தை விட்ரு. இது வெளிய வரட்டும். படம் ஓடிருச்சுன்னா வெடிமுத்து பணம் தரேன்னு சொல்லிட்டாரு.. தருவாரு..” என்றார். ஆனால், ‘அவள் வருவாளா’ படம் வெளியாகி படு தோல்வியடைந்தது. எனக்கும் அந்தப் பணம் இன்றுவரையிலும் வந்து சேரவில்லை.

இடையிடையே அஜீத்தின் மேனேஜரைத் தொடர்பு கொண்டு அஜீத்திடம் பேச வேண்டும் என்று விரும்பினேன். முடியவில்லை. ஒரு முறைகூட அஜீத் போனில் வரவில்லை. இது இப்படியாகவே, பல மாதங்கள், பல வருடங்கள் போய்விட்டது.

இந்தக் கோபத்தில்தான் ஒரு பத்திரிகைக்கு அஜீத்தின் இந்தச் செய்கை பற்றி பேட்டியளித்தேன். ஆனால் அஜீத்தோ “நான் மாணிக்கம் நாராயணனிடம் பணமே வாங்கவில்லை…” என்று சொல்லிவிட்டார்.

நான் 6 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தது டிராப்ட்டாகத்தான் கொடு்த்தேன். அதன் காப்பியை மட்டும்தான் என்னால் பெற முடியவில்லை. ஆனால், என்னுடைய வருமான வரிக் கணக்கில் இதைச் சேர்த்து எழுதிக் கொடுத்துள்ளேன். அலுவலக லெட்ஜரிலும் இது இருக்கிறது. அடுத்துக் கொடுத்த 12 லட்சம் ரூபாய்க்கான ஆதாரங்களெல்லாம் என்னிடம் இன்னும் இருக்கிறது.

இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இராம.நாராயணன், கே.ஆர்.ஜி., தாணு என்று மூன்று பேர் தலைவர்களாக இருந்த நேரத்திலேயே இது குறித்து புகார் அளித்தேன். ஒரேயொரு தடவைதான், “இந்தப் பிரச்சினை தொடர்பான கடிதம் நடிகர்கள் சங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது…” என்று மட்டுமே எனக்கு வந்தது. மற்றபடி இந்த விஷயத்தில் எந்த உதவியையும் அவர்கள் எனக்கு செய்யவில்லை.

ஒரு படத்திற்கு 40 கோடி, 50 கோடி என்று சம்பளம் வாங்கும் அஜீத் 18 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்க மனசில்லாமல் இருப்பது நியாயமா..? இதுதான் ஒரு நல்ல மனிதனுக்கு அழகா..?” என்று குமுறலுடன் கேட்டுள்ளார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

- Advertisement -

Read more

Local News