Saturday, April 13, 2024

“இயக்குநர் பாலா ஒரு சாடிஸ்ட்…” – கொதிக்கிறார் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘நான் கடவுள்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.

அந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி சமீபத்தில் ‘சாய் வித் சித்ரா’ யூடியூப் தளத்தில் பேசிய அழகன் தமிழ்மணி இயக்குநர் பாலாவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். உச்சக்கட்டமாக பாலாவை ‘ஒரு சாடிஸ்ட்’ என்றே குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் ‘நான் கடவுள்’ படம் பற்றியும், பாலா பற்றியும் பேசும்போது, “2007-ம் வருடம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் நான் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்டிருந்தேன். அதனால் வாக்கு சேகரிப்பு.. தேர்தல் வேலைகள் என்று அலைச்சல் இருந்ததால் சில நாட்களாக ஷேவ் செய்யாமல் அப்படியே விட்டிருந்தேன்.

தேர்தல் நாளன்று ஓட்டுப் போடுவதற்காக இயக்குநர் பாலாவும் அங்கே வந்தார். அவரிடத்திலும் நான் வாக்கு சேகரித்தேன். ஓட்டுப் போட்டுவிட்டு திரும்பிப் போகும்போது பாலா என்னிடத்தில் வந்து சில வார்த்தைகள் பேசிவிட்டு என்னைக் கூர்ந்து கவனித்துவிட்டுப் போனார்.

அந்தத் தேர்தலில் நான் ஜெயித்து சங்கத்திற்குப் பொருளாளராகவும் ஆகிவிட்டேன். அதன் பிறகு 3 அல்லது 4 நாட்கள் கழித்து எனது அலுவலகத்திற்கு பாலாவின் உதவியாளர்கள் மூன்று பேர் வந்து என்னை பாலா சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அதனால், நானும் பாலாவை சந்திக்க அவரது அலுவலகத்திற்குச்  சென்றேன்.

முதலில் சாதாரணமாகப் பேசிய பாலா பின்பு ‘இப்போ நான் எடுக்கப் போற ‘நான் கடவுள்’ படத்துல நீங்க ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிக்கணும்…’ என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘இல்ல தம்பி.. எனக்கு நடிப்பெல்லாம் வராது.. எப்பவும் இதே மாதிரிதான் பேசுவேன்’ என்று இழுத்தேன். ‘இது போதும். இப்போ பேசுற மாதிரியே பேசுங்க. உங்களை மாதிரி ஆளைத்தான் நான் தேடிக்கிட்டிருந்தேன். நீங்க கண்டிப்பா நடிச்சாகணும்’ என்றார்.

சரி.. இவ்வளவு தூரம் வற்புறுத்துறாரு.. பாலாவும் பெரிய இயக்குநர். அவருக்காகவாச்சும் நடிப்போமே என்றெண்ணி நானும் ஒத்துக் கொண்டேன்.

தயாரிப்பாளர் சங்கத்தில் பொருளாளர் என்ற முக்கிய பதவியில் இருந்தாலும் பாலாவுக்காக சிரமம் பார்க்காமல் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக காசிக்குக் கிளம்பினோம். அங்கே 30 நாட்கள் ஷூட்டிங். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்.

அங்கே போன 3 நாட்களில் கொண்டு போன பணம் 5 லட்சம் முழுவதும் காலியாகிவிட்டது. படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரும் பணம் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அங்கே ஷூட்டிங்கே நின்றுபோய்விட்டது. திரும்பவும் சென்னையில் இருந்து பணம் வந்தால்தான் ஷூட்டிங் என்ற நிலைமை.

அப்போது பாலா பட்ட கஷ்டத்தைப் பார்த்து மனது தாங்காமல் நானே வலியப் போய் உதவி செய்தேன். ஜெமினி லேப் அதிபருக்கு நான் காசியில் இருந்து போன் செய்து 30 லட்சம் ரூபாயை கடனாக பெற்று பாலாவிடம் கொடு்த்தேன். அந்தப் பணத்தில்தான் அங்கே படப்பிடிப்பு நடந்தது.

படப்பிடிப்பு முழுவதுமே மிகவும் கஷ்டமான சூழலில் நடந்தது. ஒரு சட்டையும், வேட்டியும்தான் எனக்குக் காஸ்ட்யூம். அதையே மண்ணுல போட்டு புரட்டி.. கசக்கியெடுத்து கொடுத்தாங்க. அதைத் துவைக்கக்கூட மாட்டாங்க. துவைச்சா கன்டினியூட்டி போயிருமாம்..

கொடுமையான வெயிலில்.. சுடு மணலில் காலில் செருப்புகூட போடாமல் தவியாய் தவித்து நடித்து முடித்தேன். அந்த மணல்ல என்னை இழுத்துட்டுப் போற மாதிரியெல்லாம் சீன் வைச்சிருந்தார்.. டோட்டலா பார்த்தா பாலா ஒரு சாடிஸ்ட். எனக்கு மட்டுமல்ல.. ஆர்யா உட்பட அனைவருக்கும் சேர்த்துதான்..!

அங்கேயிருந்து சென்னை திரும்பியவுடன் எடுத்ததையெல்லாம் போட்டுப் பார்த்த பாலா.. அதில் மோகன் வைத்யாவின் நடிப்பு அவருக்குத் திருப்தியாக இல்லாததால் மீண்டும் வாரணாசிக்குக் கிளம்பிப் போய் இன்னும் ஒரு 30 நாட்கள் ஷூட்டிங் நடத்தினார். இதனாலும் கூடுதல் செலவானது.

படம் மொத்தமும் ரெடியாக ஒரு வருஷமாயிருச்சு. இந்த நேரத்துல தயாரிப்பாளர் தேனப்பன் இந்த பிராஜெக்ட்டில் இருந்து விலகிக் கொள்வதாகச் சொன்னார். ‘நான் இதுவரையிலும் 50 லட்சம் ரூபாயை இந்தப் படத்துக்காக செலவழிச்சிருக்கேன். அந்தப் பணத்தைத் கொடுத்திட்டு படத்தை நீங்களே ரிலீஸ் பண்ணிக்குங்க’ன்னு பாலாகிட்ட சொல்லிட்டாரு.

உடனே நான் ஜெமினி லேப்ல பேசி அவங்களை எடுத்துக்கச் சொன்னேன். அவங்களும் பாலாகிட்ட பேசிட்டு ‘இந்தப் படத்துக்கு ஐந்தரை கோடிக்கு மேல பண்ண முடியாது.. அதுனால எங்களுக்கு வேண்டாம்’ன்னு சொல்லிட்டாங்க. பாலா அப்போ அந்தப் படத்துக்கு ஏழரை கோடி கேட்டாரு.

அப்புறம் நான் ஆஸ்கர் ரவிச்சந்திரனை கூட்டிட்டு வந்தேன். ஆஸ்கர் ரவிச்சந்திரனும் வந்து பார்த்திட்டு, பேசிட்டு ‘அண்ணே இந்தப் படம் 6 கோடிக்கு மேல போகாது. அதுக்கு மேலன்னா எனக்கு வேண்டாம்’ன்னு சொல்லிட்டாப்புல.

இதுக்கு நடுவுல தேனப்பன் ‘எனக்கு 50 லட்சம் ரூபாய் கொடுக்காமல் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணக் கூடாது’ன்னு தயாரிப்பாளர் கவுன்சில்ல புகார் கொடுத்திட்டாரு. நான் கவுன்சில்ல பொருளாளராக இருந்தாலும், இந்தப் பிரச்சினைல நான் பஞ்சாயத்து செய்ய முடியலை.. உக்காரவும் முடியலை.

ஆனால் கவுன்சில்ல ‘தேனப்பனுக்கு 50 லட்சம் ரூபாயைக் கொடுத்தாணும்’ன்னு உறுதியா சொல்லிட்டாங்க. அந்தச் சமயத்துல பஞ்சாயத்து பேசின சீனிவாசன் ‘இந்தப் படத்தை நான் எடுத்துக்குறேன்’னு சொல்லிட்டாரு. அப்புறம் நான் சீனிவாசன்கிட்ட பேசி ஜெமினி லேபுக்குக் கொடு்க்க வேண்டிய 30 லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுத்தேன்.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 85

இப்போதான் பாலாவுக்கு என் மேல கோபம். ஏதோ நான்தான் படத்தை வித்துத் தரேன்னு சொல்லி ஏமாத்திட்டேன்னும்.. என்னாலதான் தேனப்பனுக்கு 50 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டி வந்ததுன்னும் என் மேல கோபப்பட்டாப்புல..

அதுக்கப்புறம் என்னை அவாய்ட் செய்ய ஆரம்பிச்சாரு.. என்னைப் பார்க்கவோ.. பேசவோ மறுத்தார்.. டப்பிங் பேச நான் போனபோது அங்கே என்னுடைய கதாபாத்திரத்திற்கு வேறொருவர் டப்பிங் பேசிக்கிட்டிருந்தார்.

படத்தில் போஸ்டரில் எனது பெயர் போடவே இல்லை. என்னுடைய புகைப்படத்தை போஸ்டரில் போட்டு டிஸைன் செய்த டிஸைசன் சசி அண்ட் சசியை உடனடியாக வேலை நீக்கம் செய்தார் பாலா. இத்தனைக்கும் படத்தின் ஹீரோவான ஆர்யாவைவிட அதிகமான காட்சிகளில் நான் நடித்திருக்கிறேன்.

இருந்தும், படத்தின் டைட்டில்ல என் பெயரை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளோட சேர்த்து போட்டிருந்தாரு. படத்தோட இசை வெளியீட்டு விழால நான் பின்னாடி உக்காந்திருந்தேன். ஆனால், என்னை மட்டும் கடைசிவரைக்கும் மேடைக்குக் கூப்பிடவே இல்லை.

ஒரு பத்திரிக்கைக்காரங்க இந்தப் படம் பத்தி என்கிட்ட பேட்டி கேட்டாங்க. நானும் கொடு்த்தேன். அந்தப் பேட்டில ‘இந்தப் படத்துல நான் நடிக்கலை.. வாழ்ந்திருக்கேன்’ அப்படீன்னு சொல்லியிருந்தேன். அதை யாரோ பாலாகிட்ட சொல்லிட்டாங்க போலிருக்கு.

என்னைக் கூப்பிட்டு விட்டாரு. ‘நீங்க இந்தப் படத்துல என்ன கிழிச்சிருக்கீங்க.. என்னைவிட பெரிசா உழைச்சிருக்கீங்களா.. யாரைக் கேட்டு பேட்டி கொடுத்தீங்க.. உங்களுக்கு அறிவிருக்கா..?’ என்று கத்தினார். நான் மெளனமா அவர் முன்னாடி கையைக் கட்டிட்டு நின்னுக்கிட்டிருந்தேன். ‘தப்புதான் தம்பி.. என்னை மன்னிச்சுக்குங்க’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

இந்தப் படத்துல நடிச்சிட்டிருந்தப்போ என்னோட அம்மா திடீர்ன்னு இறந்துட்டாங்க. அப்போ நான் தாடியோட இருந்தேன். ‘தாடியை எடுத்தா கன்ட்டினியூட்டி போயிரும்’ன்னு சொன்னாங்க. சரி.. நம்மளால ஒரு படம் பாதிக்கப்படக் கூடாதேங்குறதுக்காக பெத்த அம்மாவுக்காக செய்ய வேண்டிய சடங்கைக்கூட செய்யாமல் தவிர்த்தேன்.

இப்படி இந்தப் படத்துக்காக என்னால முடிஞ்ச அத்தனையும் செஞ்சதுக்காக என்னை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ… அவ்வளவு கேவலப்படுத்திட்டாரு பாலா…” என்று கொதித்துப் போய் சொல்லி முடித்திருக்கிறார் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.

- Advertisement -

Read more

Local News