மலையாள திரைத்துறையில் பிரபல நடிகராகவும் இயக்குநராகவும் இருப்பவர் பிருத்விராஜ் சுகுமாரன். மலையாளம் மட்டுமன்றி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் மகேஷ்பாபுவின் 29வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஒடிஷா மாநிலத்தில் நடைபெற்றது. அந்த இடத்தில் நடைபெற்ற சில காட்சிகளில் பிருத்விராஜ் கலந்து கொண்டு நடித்துள்ளார். ஆனால் இதுவரை அவர் இப்படத்தில் நடிக்கிறார் என்பதை உறுதி செய்யும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மகேஷ்பாபுவுடன் சேர்ந்து ஒடிஷாவுக்கு சுற்றுலா சென்றுவந்தேன்” என்று கூறினார். இருப்பினும், அந்தப் படத்தில் நடிக்கிறேன் என்பதையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு தான் இதைப்பற்றி மேலும் ஊடகங்களிடம் பேசுவேன் என்றும் தெரிவித்தார்.பிருத்விராஜ் இயக்கியுள்ள, மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல் 2 எம்புரான்’ திரைப்படம் வரும் வாரம் மார்ச் 27ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அந்தப் படத்தின் பணி நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் கூட, அவர் ராஜமவுலியின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுவிட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.