Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

சிபிராஜூக்கு பிரபாஸ் கேட்காமலேயே செய்த உதவி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Boss Movies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் K.செல்லையா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ரங்கா’.

இந்தப் படத்தில் சிபிராஜ், நிகிலா விமல் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் வினோத் இயக்கத்தில் பரபரப்பான கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இந்த ‘ரங்கா’ திரைப்படம் வரும் மே 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையொட்டி இப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன்பாக பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலை இயக்குநர் அருண் பேசும்போது, “இது எங்கள் டீமில் இருக்கும் எல்லோருக்கும் முக்கியமான படம். நண்பர் வினோத்தின் பார்வை மிக வித்தியாசமாக பிரம்மாண்டமாக இருக்கும், அவர் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அவர் தரும் இன்புட் துல்லியமாக இருக்கும். காஷ்மீரின் உடைந்த பாலம் ஒன்றை உருவாக்கி ஷீட் செய்தோம். இந்தப் படம் நன்றாக வந்துள்ளது. ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறேன்…” என்றார்.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “இந்த ரங்கா படம் சாதாரணமாக எல்லாரும் நினைப்பது மாதிரி இல்லாமல் வித்தியாசமான படமாக வந்துள்ளது. அதற்கேற்ற செலவில்  நல்ல பட்ஜெட்டில் மிக அருமையாக எடுத்துள்ளார்கள். ரோஜா’ படத்திற்கு பிறகு காஷ்மீரை மிக அற்புதமாக காட்டியுள்ளார்கள். இந்த மாதிரி கதையை வினோத் சொல்லும்போது தயாரிப்பாளர் விஜய் முழுமையாக செய்து எடுத்து வந்ததற்கு வாழ்த்துகள். சிபிராஜ் கதையைத் தேர்ந்தெடுப்பது வித்தியாசமாக இருக்கும். இப்படமும் அதே போல் நல்ல படமாக இருக்கும். இந்த படத்தின் உழைப்புக்கு பலன் கிடைக்கும். வாழ்த்துக்கள்..” என்றார்.

இயக்குநர் வினோத் பேசும்போது, “இந்த ‘ரங்கா’ எனது முதல் படம். நிறைய தடைகளைத் தாண்டிதான் இங்கு வந்துள்ளேன். எல்லோருக்கும் அந்த தடைகள் இருக்கும். அது எனக்கும் குழுவிற்கும் இருந்தது. எல்லாவற்றையும் கடந்து படம் இப்போது ரிலீஸிக்கு வந்தது மகிழ்ச்சி. எனது குடும்பம் மிகப் பெரிய ஆதரவு தந்தார்கள். அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் விஜய்யிடமிருந்துதான் இந்தப் படம் துவங்கியது. அவருக்கு நன்றி.

இந்தக் கதைக்கு சிபிராஜ் சார் கச்சிதமாக இருப்பார் என அவரை அணுகினோம். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. சிபிராஜ் இப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். நிகிலா விமல் இந்தப்படத்தில் மிக முக்கியமான பாத்திரம். இப்படத்தில் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தார்கள்.

இப்படத்தில் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் ஜானர் மாறிக் கொண்டே இருக்கும். மோனிஷூக்கு நீச்சல் தெரியாது. ஆனால் தெரியும் என சொல்லி நடிக்க வந்தார். அவர் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது…” என்றார்.

நடிகர் சிபிராஜ் பேசும்போது, “இந்த ‘ரங்கா’ எனக்கு தற்செயலாக அமைந்த படம். படத்தின் தயாரிப்பாளர் விஜய் கே.செல்லையா எனக்கு நல்ல ஃப்ரண்ட். அவர்தான் ஒரு நாள் எனக்கு போன் செய்து, “வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதை இருக்கு. கேட்குறீங்களா..?”ன்னு கேட்டார். கதை கேட்டதும் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அதனால் உடனே சம்மதம் தெரிவித்துட்டேன்.

கதைப்படி இந்தப் படத்தின் நாயகனுக்கு ஏலியன் சிண்ட்ரோம் இருக்கும். அவன் நினைப்பதை அவன் கை கேட்காது. இப்படியொரு வித்தியாசமான கதை. இதனாலேயே எனக்கு இந்தக் கதை பிடித்துப் போனது. ஆனால், வினோத் புது இயக்குநர் என்பதால் எப்படி எடுப்பாரோ என்ற தயக்கமும் இருந்தது.

ஆனால், காஷ்மீரில் ஃபர்ஸ்ட் ஷெட்யூலிலேயே இயக்குநரின் திறமை தெரிந்துவிட்டது. மிக, மிக அட்டகாசமாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். நானே ஒரு தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளேன். ஆனால், காஷ்மீர் போய் ஷூட் செய்ய வேண்டும் என்பதை நான் ஒத்துக் கொண்டிருக்கவே மாட்டேன்,  ஆனால், தயாரிப்பாளர் விஜய் ஸார், இதற்கு பெரிய மனதுடன் ஒத்துக் கொண்டு இந்தப் படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுத்துள்ளார். அவருக்கு நன்றி.

இப்படத்தின் டிரெயிலரை பிரபாஸ் சாருக்கு, அப்பாதான் அனுப்பியிருக்கிறார். எல்லோருக்கும் அனுப்புவதுபோல அவருக்கும் அனுப்பியிருக்கார். பிரபாஸ் ஸாருக்கு ட்ரைலர் பிடித்ததும், “நானும் ஷேர் பண்றேன்” என்று சொல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்.

இங்கே நாம் கேட்டால்கூட சிலர் ஷேர் செய்யமாட்டாங்க. ஆனால், நான் கேட்காமலேயே பிரபாஸ் சார் ஷேர் செய்து  அந்த டிரெயிலர் நிறைய பேரை சென்றடைய உதவினார்.

1000 கோடிவரை வசூல் செய்த ‘பாகுபலி’ பட ஹீரோ எந்தவிதப் பந்தாவும் இல்லாமல் என்னைப் போன்ற ஒரு வளர்ந்துவரும் நடிகரை இப்படி ஊக்கப்படுத்தும்விதம் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது.

இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட வாய்ப்புகள் வந்தாலும் திரையரங்கிற்குக் கொண்டு வருவதில்தான் பிடிவாதமாக இருந்தார் தயாரிப்பாளர் விஜய். படத்தை சக்திவேல் சார் ரிலீஸ் செய்வதில் மிகவும் மகிழ்ச்சிதான். எப்போதும், என்னுடைய படங்களுக்கு ஆதரவு தந்துள்ளீர்கள். அதேபோல் இந்தப் படமும் உங்களுக்கு பிடிக்கும்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News