Thursday, April 11, 2024

பவுடர் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தப் படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். தமிழ்ச் சினிமாவின் முன்னணி பத்திரிகை தொடர்பாளரான நிகில் முருகன் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். மேலும், படத்தின் இயக்குநரான விஜய்ஸ்ரீஜியும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், சாந்தினி தேவ், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, சிலிம்ஸன் சிவா, விக்கி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் 6 பல்வேறு கதைகள் கொண்ட திரைக்கதைகளை ஒன்றிணைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

சென்னை சிட்டி போலீஸ் கமிஷனரின் வீட்டில் ஒரு உறுப்பினர் காணாமல் போக.. சிட்டி முழுவதும் போலீஸ் அலர்ட்டாகிறது. இந்த நேரத்தில் தொகுதிக்கு நல்லது செய்யாத ஒரு எம்.எல்.ஏ.வைக் கொல்கிறது ஒரு இளைஞர் கூட்டம். தன் மகளை ஏமாற்றி வயிற்றில் பிள்ளையைக் கொடுத்துவிட்டு கைவிட்ட பெரிய இடத்து இளைஞனை அவசரப்பட்டு கொலை செய்கிறார் வையாபுரி… நாளைய தினம் திருமணமாகிச் செல்லவிருக்கும் டாக்டர் வித்யாவின் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாகச் சொல்லி அவரை மிரட்டுகிறான் ஒரு இளைஞன்.. கொரோனாவால் தொழில் முடங்கிப் போனதால் வருமானம் இல்லாமல் தவிக்கும் ஒப்பனைக் கலைஞன் தன் மகனின் ஸ்கூல் பீஸுக்குப் பணம் இல்லாமல் தவிக்கிறான். ஒரு அபார்ட்மெண்ட்டில் திருட வருகிறார்கள் திருடர்களான ஆதவனும், அவரது சிஷ்யனும்… அன்றைய காலையில் தனக்குப் பிறந்த குழந்தையைக்கூட பார்க்க போக முடியாமல் நைட் டூட்டி என்று மாட்டிக் கொள்ளும் இன்ஸ்பெக்டர் நிகில் முருகன்.. என்று இவர்களைச் சுற்றி ஓர் இரவில் நடக்கும் கதைதான் இந்தப் பவுடர்’ திரைப்படம்.

இந்தச் சின்னச் சின்னக் கதைகளை ஒன்றோடு ஒன்றாக இணைத்து கிளைமாக்ஸில் டிவிஸ்ட்டாக ஒரு இணைப்பினைக் கொடுத்து ‘அட’ சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர் விஜய்ஸ்ரீஜி.

இன்ஸ்பெக்டர் கேரக்டரில் இப்போது இருக்கும் அதே தோற்றத்துடன் அறிமுகமாகியிருக்கிறார் புதுமுக நடிகரான நிகில் முருகன். இந்தப் படத்திற்காக ‘ராகவன் NM’ என்ற  ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் கமல் கதாப்பாத்திரத்தின் பெயரை தத்தெடுத்துக் கொண்டுள்ளார் நிகில் முருகன். அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்குப் பொருந்தும் அளவுக்கான உடற்கட்டு நிகிலிடம் இல்லையென்றாலும், தனது குரல் வளத்தை மட்டுமே முன் வைத்து நடித்துள்ளார்.

விசாரணை கைதிகளிடம் தனது மிரட்டல் குரலில்  விசாரணை நடத்துவதும்.. மேலதிகாரிகளிடத்தில் கம்பும் உடையாமல், அடியும் விழும்படியாக பேசும்விதமும் ஒரு வித்தியாசமான நடிப்புப் பாவனையை உருவாக்கியிருக்கிறார் நிகில் முருகன். இதே நிகிலை வைத்துதான் அடுத்த பாகத்திற்கான லீடையும் கிளைமாக்ஸில் கொடுத்துள்னர். நிகில் தொடர்ந்து மாறுபட்ட வேடங்களில் நடித்து மேலும், தன் திறமையைக் காண்பிக்க வாழ்த்துகிறோம்.

‘பரட்டை’ என்ற கதாப்பாத்திரத்தில் பாவப்பட்ட மனுஷனாக தோன்றி தனது கேரக்டருக்குரிய நடிப்பை மிகச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்ஸ்ரீஜி. இவருடைய மனைவி இவரை வார்த்தைகளால் புரட்டியெடுக்கும் தருணத்தில் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத தன்மையுடன் எழுந்து வருவதும், பின்பு பணம் கிடைத்ததும் விடியற்காலையில் மனைவிக்கு போன் செய்து துணிக்கடைக்கு அழைப்பதுமாய்(பலமான கை தட்டல் கிடைத்தது இந்தக் காட்சிக்கு மட்டும்தான்) இவரது கேரக்டர் ஸ்கெட்ச் மட்டும் மிகவும் ரசனையானது. இவரது அழுத்தமான நடிப்புக்கு இவரது குரலும் ஒத்துழைத்துள்ளது.

இதுவரையிலும் வெறும் காமெடி நடிகராக மட்டுமே தன்னைக் காண்பித்திருந்த வையாபுரி, இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக புரமோஷன் வாங்கி அதிலும் பாஸ் செய்திருக்கிறார். தன் மகளுக்காக ஒரு கொலையை செய்துவிட்டு தன்னிரக்கத்தில் அவர் புலம்புவதும், அந்தக் கொலையை மறைக்கத் திடமாக அவர் செய்யும் டிரிக்கும், காவலர்களை சமாளிக்கும்விதமும் இந்தக் கேரக்டருக்கு வையாபுரி பெரும் நியாயம் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இவருடைய மகளாக நடித்திருப்பவரும் தேர்ந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

படத்தில் ஒரு முக்கிய கேரக்டரை ஏற்று நடித்திருக்கும் வித்யா பிரதீப் வழக்கம்போல தன் கண்களாலேயே பேசியிருக்கிறார். காதலனாக நடித்தவனை வீட்டுக்குள் சமாளிக்கும் அந்தக் காட்சிகளில் ஐயோ பாவம்  என்ற உணர்வையும், அவர் செய்யும் கொலையையும் சரிதாம்மா என்றே நம்மையும் நினைக்க வைத்துவிட்டார்.

சாந்தினி தேவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சற்று அதீதமாக போய்விட்டன. இவர்களை வைத்து ஆதவனும், அவரது சிஷ்யனும் பேசும் இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் படத்தின் தன்மையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டன.

அதேபோல் படம் முழுவதையும் சீரியஸாகக் கொண்டு சென்று ஒரு நல்ல சஸ்பென்ஸ், திரில்லர் படமாக இருந்திருக்க வேண்டிய இந்தப் படம், இடையிடையே மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, கான்ஸ்டபிள்களின் மொக்கை காமெடி என்று தனி டிராக்கில் சென்று இது என்ன மாதிரியான படம் என்கிற குழப்பத்தை உண்டு செய்துவிட்டது.

பல்வேறு இடங்களில் கேமிரா அடுத்தடுத்துப் பயணப்பட வேண்டியிருந்தாலும் ஒளிப்பதிவில் ஒரு துளிகூட குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளார் ஒளிப்பதிவாளர். வாழ்த்துகள் ஸார். இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டியின் இசையில் பின்னணி இசைதான் சிறப்பு. மேலும் ‘சாயம் போன வெண்ணிலவே’ பாடல் மெலடியாக கேட்க வைக்கிறது.

‘சூது கவ்வும்’ படத்தில் வரும் ‘காசு பணம் துட்டு மணி’ பாடல் பாணியில், படத்தின் முடிவில் வரும் ‘நோ சூடு நோ சொரணை’ பாடல் தனி ஆவர்த்தனமாக ஈர்த்து ரசிகர்களை கிளைமாக்ஸில் ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைக்கிறது. ஆனால், இதுவே படத்துக்கு மிகப் பெரிய பேக் டிராப்பாகவும் ஆகிவிட்டது.

படத்தின் ஒரு காட்சியில் மனிதக் கறி அடங்கிய பெட்டியில் HUMAN MEAT’ என்றே எழுதப்பட்டிருப்பது நமக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தருகிறது. இந்த அளவுக்கு வெளிப்படையாகவா மனிதக் கறியை விற்பனை செய்வார்கள்..?

தனக்கு வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யாத எம்.எல்.ஏ.வை கொலை செய்தாலும் தப்பில்லை என்பதாகக் காட்டியிருப்பதும், காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்களை கொலை செய்தாலும் தகும் என்று சொல்லியிருப்பதும் ஏற்க முடியாதது. ஆனால், இது சினிமாவாச்சே என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் அதே சமயம் போலீஸ் உயரதிகாரிகள் தங்களது கீழே வேலை செய்யும் அதிகாரிகளை கேவலப்படுத்தும் நோக்கில் அடிமையாய் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லியிருப்பதும், மக்களைக் காப்பாற்றுவதுதான் காவல் துறையின் வேலை. இந்த வேலைக்கு வந்துவிட்டு வேலையின் மீது அக்கறையில்லாமல் இருக்கக் கூடாது என்று இன்ஸ்பெக்டர் நிகில் முருகன், ஏட்டு சிங்கம் புலிக்கு கிளாஸ் எடுப்பதெல்லாம் பாராட்டுக்குரியது.  

படத்தின் இறுதியில், வித்யா ப்ரதீப்பின் கதையோடு சம்பந்தப்படுத்தி படத்தை முடித்தவிதத்தில் இது நல்லதொரு சஸ்பென்ஸ், த்ரில்லர் படத்திற்கான க்ளைமேக்ஸ்தான் என்பதில் சந்தேகமில்லை.

RATING : 3 / 5

- Advertisement -

Read more

Local News