Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

“எந்தப் படமா இருந்தாலும் கலாய்க்குறாங்க” – நடிகர் சூரியின் வருத்தம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்ரீஅண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் செங்குட்டுவன், அம்மு அபிராமி நடிப்பில், இயக்குநர் மணிபாரதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேட்டரி’.

இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் சூரி பேசும்போது, “இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்த லிங்குசாமி சாருக்கு நன்றி. தான் வெற்றியடைவது மட்டுமல்லாமல் தன்னுடன் அசோசியேட்டாக இருந்தவர்களும் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனது கொண்டவர் லிங்குசாமி ஸார்.

மணிபாரதி அண்ணன் என்னை இந்த விழாவுக்கு அழைக்கும்போது “நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இப்படத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆகையால் என்ன பேசுவது..?” என்று கேட்டேன்.

இப்படத்தின் கதையை இயக்குநர் மணிபாரதி கூறும்போது, “இது மாதிரியெல்லாம் இப்போது நடக்கிறதா?” என்று கேட்டேன். “ஆமாம் தம்பி…” என்றார். அவர் கதை கூறிய விதத்தைக்கேட்டு எனது கை மட்டும் நீளமாக இருந்திருந்தால் அங்கிருந்தே அவரை கட்டியணைத்திருப்பேன்.

ஒரு உயிருக்கு பிரச்சனை என்றால் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். அப்பா, அம்மா தம்பி என்று அவர்களுக்கு உயிர் போகும் அளவிற்கு பிரச்சனை என்றால் நாம் தவித்துவிடுவோம்.

ஒரு மனிதன் என்றைக்கு வேண்டுமானால் இறந்துவிடுவான். அந்த சூழ்நிலையில், ஒன்று கடவுளிடம் நிற்பான். இன்னொன்று மருத்துவரிடம் நிற்பான். அதுதான் உண்மை. அப்படி இருக்கும் பட்சத்தில் சில மருத்துவ கும்பல், நம்முடைய பாசத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது. அதற்கு தீர்வு கொடுக்கும் படமாக இது இருக்கும். இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் தேவையான படம்.

எவ்வளவு வசனங்கள் கொடுத்தாலும் போதாது என்று கூறும் மனிதர் எம்.எஸ்.பாஸ்கர். அதேபோல், அனைவருடைய வசனங்களையும் இவரே பேசி விடுவார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஸ்டூடியோவிற்கு வரும்போது கண்களில் படுவது, கைகளில் கிடைப்பது என்று எல்லாவற்றையும் எடுத்து வந்து இசையமைக்கும் வல்லமை படைத்தவர்.

இன்று இருக்கும் காலகட்டத்தில் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் கலாய்க்கிறார்கள். அதேபோல், முழு படத்தையும் ஈடுபாட்டோடு பார்ப்பதில்லை. பெரிய இயக்குநர்களின் படங்களை அனைவரும் சுலபமாக பார்க்கிறார்கள். ஆனால், புது நடிகர்கள், இயக்குநர்களின் படங்களைப் பார்ப்பதற்கு தயங்குகிறார்கள். ஆனால், அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News