இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வரும் மார்ச் 5-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் 2017-ம் ஆண்டே தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதன் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கேஸண்ட்ரா, நந்திதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
செல்வராகவன் இதுவரையிலும் இல்லாத புதுமையாக ஒரு பேய்ப் படமாக இதனை உருவாக்கியிருக்கிறார். படத்தில் பேயாக ரெஜினா கேஸண்ட்ரா நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியானபோதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. பின்னணி இசைக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. எஸ்.ஜே.சூர்யாவின் வெறித்தனமான நடிப்பும் பாராட்டுகளை பெற்றது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் கூடியிருந்தது.
ஆனால், பல பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக இத்திரைப்படம் வெளியாகாமலேயே இருந்தது.ன. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் மார்ச் 5-ம் தேதி வெளியாவதாக படத்தின் இயக்குநரான செல்வராகவன் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தை ராக்போர்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் டி.முருகானந்தம் வெளியிடுகிறாராம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளதால் செல்வராகவன் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.