லைகா நிறுவனத்துடனான சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
“இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்கக் கூடாது” என்று இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது லைகா நிறுவனம்.
இந்த வழக்கு விசாரணையின்போது “இதனை கோர்ட்டுக்கு வெளியில் சமரசமாக பேசித் தீர்வு காணும்படி” நீதிமன்றமே அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழங்கு இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய ஷங்கர் தரப்பு வழக்கறிஞர், “நீதிமன்றம் அறிவுறுத்தியபடியே லைகா நிறுவனத்துடன் எனது கட்சிக்காரரான இயக்குநர் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வியடைந்துவிட்டது.
லைகா நிறுவனம் வரும் ஜூன் மாதத்திற்குள்ளாக படத்தை முழுவதுமாக முடித்துக் கையில் கொடுக்கும்படி கேட்கிறது. ஆனால் ‘இந்தியன்-2’ படத்தை அப்படி ஒரே மாதத்தில் முடிக்க முடியாது. அதில் நிறைய வேலைகள் உள்ளன.
சமீபத்தில் இறந்து போன நடிகர் விவேக்கின் கதாபாத்திரத்தை மாற்ற வேண்டும். அல்லது அவர் நடித்தக் காட்சிகள் முழுவதையும் நீக்கிவிட்டு வேறு ஒருவரை வைத்து மீண்டும் ரீ ஷூட் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் அதிக காலம் தேவைப்படுகிறது.
இதனால் ‘இந்தியன்-2’ படத்தினை 2021 அக்டோபர் மாதத்திற்குள் முடித்துத் தருகிறேன் என்று இயக்குநர் ஷங்கர் சொல்லியும் லைகா நிறுவனம் ஜூன் மாதத்திற்குள் முடித்தாக வேண்டும் என்றே சொல்லி வருகிறது. இதனால் இந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக” கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.