விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி இணைந்து ‘கூழாங்கல்’ என்ற படத்தின் முழு தயாரிப்புக்கும் பொறுப்பேற்றுள்ளது.
மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தையும் விக்னேஷ் சிவன் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, இதர நடிகர்கள் நடித்த நல்ல படங்களையும் வாங்கி வெளியிட விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி முடிவு செய்துள்ளது. முதலில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராக்கி’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து தற்போது யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படத்தின் உரிமையையும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடியே கைப்பற்றியுள்ளது.
இது தொடர்பாக விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
“மிக அரிதான ஒரு நாள்தான். ஒரு படைப்பைப் பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்துப் பெருமை கொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த ‘கூழாங்கல்’ எனும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது.
‘கூழாங்கல்’ பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படம். தலைப்பைப் போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும், அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. முழுக்க, முழுக்க திறமையான புதுக் குழுவினராலும் நடிகர்களாலும் இயக்குநராலும் உருவான இத்திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல், தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
இப்படத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பைப் பொறுப்பேற்றுள்ளோம்.
உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்…”.
என்று கூறியுள்ளனர்.