Thursday, April 11, 2024

நானே வருவேன் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தப் படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தமிழ்த் திரையுலகத்தின் மூத்தத் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஒரு நாயகியாக இந்துஜாவும், இன்னொரு நாயகியாக எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகையும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபு, யோகி பாபு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – செல்வராகவன், தயாரிப்பு – கலைப்புலி எஸ்.தாணு, இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ், படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், தயாரிப்பு வடிவமைப்பு – ஆர்.கே.விஜய் முருகன், நடனப் பயிற்சி இயக்கம் – கல்யாண், சதீஷ், சண்டை பயிற்சி இயக்கம் – திலீப் சுப்பராயன், ஸ்டன் சிவா.

பிரபு மற்றும் கதிர் என்ற இரட்டை மகன்களுடன் கோவையின் மலைப் பகுதியில் வசித்து வருகிறார்கள் சரவண சுப்பையாவும் அவரது மனைவியும். இருவரில் மூத்தவனான கதிரின் நடவடிக்கைகள் சமீப காலமாக சைக்கோத்தனமாய் இருக்கின்றன.

இதனால் இவனது தந்தை இவனைக் கண்டிக்கிறார். தண்டிக்கவும் செய்கிறார். ஆனால் கதிரின் சைக்கோத்தனம் முற்றிப் போய் ஒரு கட்டத்தில் அப்பாவையே கொலை செய்துவிடுகிறான்.

இவர்களது அம்மா இருவரின் ஜாதகத்தையும் ஜோதிடரிடம் கொடுத்து பரிகாரம் கேட்க.. “கதிரை உடன் வைத்துக் கொள்ளாதே.. அவன் இன்னொரு மகனை நிச்சயம் கொன்றுவிடுவான்” என்கிறார் ஜோதிடர். இதனால் கோவிலேயே கதிரை அனாதையாக விட்டுவிட்டு அவனது அம்மா பிரபுவை மட்டும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்துவிடுகிறார்.

இப்போது சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கும் பிரபுவுக்கு இந்துஜாவுடன் திருமணமாகி 12 வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறாள். இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள இந்துஜா ஆர்வமாக இருந்தாலும், தன் வாழ்க்கை படிப்பினையை ஒரு பாடமாக எடுத்துக் கொண்ட பிரபு, அது வேண்டாம் என்கிறார்.

இந்த நேரத்தில் திடீரென்று மகளின் நடவடிக்கைகளில் வித்தியாசம் கூடுகிறது. தனது அறைக்குள் யாரோ ஒருவருடன் அவள் தனிமையில் பேசுகிறாள். அழுகிறாள். மன நல மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்றும் பிரயோசனமில்லாமல் இருக்கிறது. கடைசியாக தன் மகளைப் பிடித்திருப்பது ஒரு பேய் என்பது பிரபுவுக்குத் தெரிய வருகிறது.

பேயுடன் டீலிங் பேசுகிறார் பிரபு. பேயோ தான் சொல்லும் ஒருவனை கொலை செய்தால்தான் அவரது மகளைவிட்டு விலகுவேன் என்று உறுதியாகச் சொல்கிறது. அந்தக் கொலை செய்யப்பட வேண்டியவன் யார் என்று பார்த்தால் அது பிரபுவின் உடன் பிறந்த அண்ணனான கதிர்.

அந்தப் பேய்க்கும், கதிருக்கும் என்ன சம்பந்தம்..? கதிரை கொலை செய்ய பேய் ஏன் துடிக்கிறது..? இனி என்ன நடக்கிறது என்பதுதான் இந்த பேய், அமானுஷ்யம், சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த படத்தின் திரைக்கதை.

பிரபு, கதிர் என்று இரட்டை வேடத்தில் படம் முழுவதையும் ஒற்றை மனிதராகத் தாங்கிப் பிடித்துள்ளார் தனுஷ். ஒரு பக்கம் ஒரு சாதுவான குடும்பத் தலைவனாக, பாசமிக்க அப்பாவாக, அன்பான கணவனாக, அமைதியின் திருவுருமாக பிரபு’ என்ற கதாபாத்திரத்தில் அமைதியாய் நடித்துள்ளார் தனுஷ்

இன்னொரு பக்கம், சைக்கோத்தனம் கலந்த கொடூர வில்லனாக.. புத்தம்புது வகையிலான நடிப்பை தனது பாடி லேங்க்வேஜ் மூலமாக காட்டி ஏன்யா.. ஏன்.. இப்படி என்று கேள்வி கேட்கும் அளவுக்கு வில்லத்தனத்தில் அசத்தியிருக்கிறார் ‘கதிர்’ என்ற தனுஷ்.

யோகிபாபுவிடம் அப்பாவியாக பேயைப் பற்றி விசாரிப்பதும், தன்னிரக்கம் கொண்டு கவலைப்படுவதும், மகளிடம் பாந்தமாகப் பேசி உண்மையை சொல்ல வைக்கும் இடத்திலும் தனுஷ் தெரியாமல் பிரபுதான் தெரிகிறார்.

இதேபோல் பிரபுவை போலவே துவக்கத்தில் அமைதியான குணத்தைக் காட்டிவிட்டு, பின்பு இன்னொரு சந்தர்ப்பத்தில் “எனக்கு இன்னொரு முகம் இருக்கு” என்ற ரீதியில் காட்டும் கொடூர வில்லத்தனமும், மனைவி, மகன்களிடத்தில் பாசமாக இருந்தாலும் தன்னைப் பற்றிய உண்மை தெரிந்தவுடன் முழுக்க, முழுக்க சைக்கோவாக மாறி நடித்திருப்பதிலும் கதிர்தான் தெரிகிறார்.

தனுஷின் மகளாக நடித்திருக்கும் ஹியா டேவிக்கு திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். சின்னப் பொண்ணு.. இயக்குநர் சொன்னதைக் கேட்டு நடித்திருந்தாலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பேயிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சியிலும், பேய் சொல்வதைக் கேட்டுக் கேட்டு அப்பாவிடம் சொல்லும் காட்சியிலும், பேய் தன் உடம்பில் ஏறியவுடன் காட்டும் திமிரும், அலட்சிய சிரிப்புமாய் நம்மை சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார்.

இந்துஜா, எல்லி அவரம் இருவருமே பாவமான மனைவிகளாக நடித்துள்ளனர். இந்துஜா இந்தக் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானவராகவே இருக்கிறார். கையறு நிலையில் இருக்கும் அம்மா, மனைவி கேரக்டரை நிறைவாகவே செய்திருக்கிறார் இந்துஜா.

இதேபோல் எல்லி அவரம் ஸ்வீடன் நாட்டுப் பெண்ணாக இருந்தாலும் பாலிவுட் நடிகை போலவே தோற்றமளிக்கிறார். வாய் பேச முடியாத ஊமை கதாபாத்திரத்தில் என்ன நடிக்க முடியுமோ, அதைச் செய்து நமது அனுதாபத்தை முழுமையாகப் பெற்றுள்ளார்.

படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே நடித்து கவனம் பெற்றுள்ளார் இயக்குநர் செல்வராகவன். தனுஷின் மகன்களாக வரும் பிரபவ், பிரணவ் இரட்டையர்களின் நடிப்பும் அபாரம். அதிலும் தனுஷ் செய்த கொலைகளை நேரில் பார்க்கும் மூத்த மகன் தனது பயம், பரிதவிப்பு என்ற உணர்வுகளை மிக அழகாகக் காட்டியிருக்கிறார்.

யோகிபாபு, பிரபு இருவருக்கும் சின்ன கதாபாத்திரங்கள்தான். ஆனால் இவர்கள் இருவரும் மோதிக் கொள்ளும் ஒரு காட்சி, திரைக்கதைக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யாமல் இருக்கிறது. ஏன்.. எதற்காக இந்தக் காட்சி..?

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் கேமரா அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் ஏற்ப வித்தியாசமான லைட்டிங்குகள் மற்றும் காட்சிகளை படம் பிடித்துக் காட்டியுள்ளது.

சென்னையில் வீட்டுக்குள் நடக்கும் மர்ம சம்பவங்களை படம் பிடித்திருக்கும்விதம் பரபரப்பை கூட்டியிருக்கிறது. இதேபோல் கதிரைத் தேடி பிரபு செல்லும் காட்சியில் அந்தக் காட்டுப் பகுதியை நம் மனதைவிட்டுப் பிரியா முடியாத அளவுக்குப் படம் பிடித்துள்ளார். சண்டை காட்சிகளிலும், பேயின் அதிரி புதிரி காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் இயக்குநருக்கு பெரிதும் உதவியுள்ளார் என்றே சொல்லலாம்.

படத்தின் இன்னொரு ஹீரோ நிச்சயமாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாதான். கதிரின் ஆர்ப்பாட்டமான அறிமுகக் காட்சியில் ஒலிக்கும் வீரா சூரா’ பாடலும், பின்னணி இசையுமே அந்தக் கதாபாத்திரத்தை வெகுவாக உயர்த்திக் காட்டியுள்ளது. பாடல்களும் கேட்கும் ரகம்தான்..!  மிகச் சரியாக 2 மணி நேரத்தில் முடியும் அளவுக்கு இறுக்கமான படமாக படத் தொகுப்பு செய்திருக்கும் படத் தொகுப்பாளர் புவன் சீனிவாசனுக்கும் ஒரு நன்றி..!

ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால் படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் கதையை முடிக்க திரைக்கதை அலை பாய்கிறது என்பதும் உண்மைதான்.

இண்டர்வெல் நேரத்தில் வரும் ட்விஸ்ட் எதிர்பார்க்காதது. ‘விக்ரம்’ படம்போல இரண்டாம் பாதிக்காக ஏங்க வைக்கும் டிவிஸ்ட் அது. இதேபோல் கிளைமாக்ஸ் காட்சியையும் சஸ்பென்ஸூடன் முடித்து வைத்துள்ளார் செல்வா. பிழைத்திருப்பது கதிரா, பிரபுவா என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்..!

கடைசிவரையிலும் போலீஸையே கண்ணில் காட்டாதது.. இத்தனை கொலைகளை செய்தும் கதிர் சுதந்திரமாக நடமாடுவது.. கதிரின் சைக்கோத்தனத்திற்கான ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணத்தை சொல்லாதது.. என்று பல கேள்விகள் இந்தப் படத்தில் கேட்கப்பட வேண்டியவைகள் என்றாலும், இது அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு ஒரு சுவையான திரில்லிங் அனுபவத்தைத் தரும் படம் இது.

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News