அசாம் மாநிலம் தேஜ்பூரைச் சேர்ந்தவர் கயாடு லோஹர். 2021-ஆம் ஆண்டு, மனோரஞ்சன் நடித்த ‘முகில்பேட்டை’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர், 2022-ஆம் ஆண்டு, ஸ்ரீ விஷ்ணு நடித்த ‘அல்லூரி’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்துவைத்தார். இதைத் தொடர்ந்து, ஒரு மராத்தி மற்றும் மலையாள திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.பிப்ரவரி 21-ஆம் தேதி, பிரதீப் ரங்கநாதன் நடித்த, அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது அறிமுகத்தைச் செய்த கயாடு, தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது, ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து, தெலுங்கு பட இயக்குனர் கே.வி. அனுதீப்பின் ‘பங்கி’ படத்தில் நடிக்க உள்ளார். மேலும், அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் தன் பிரியமான நடிகர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் கயாடு லோஹர். சேலம் தனியார் கல்லூரியின் ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர், தனது செலிபிரிட்டி க்ரஷ் ‘விஜய்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் தன் பிடித்த படமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.அதன்பிறகு, “பெண்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?” என ஒரு மாணவி கேட்டபோது, “முதலில் அனைவரும் தங்களை நம்ப வேண்டும். நான் என்னை நம்பியதால் தான் இன்று இந்த உயர்வை அடைந்திருக்கிறேன். நேர்மையான எண்ணத்துடன் முன்னேறுங்கள், அது உங்களை ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்” என்று உற்சாகமாக பதிலளித்தார்.