Saturday, April 13, 2024

மோகனுக்கு ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது எப்படி..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் மோகனின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கிய திருப்பு முனை படமாக அமைந்தது ‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படம்.

“அத்திரைப்படத்தில் மோகன் நடிப்பதற்கு நான்தான் காரணமாக இருந்தேன்” என்று ஸ்டில்ஸ் ரவி பேட்டியளித்துள்ளார்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இதனைக் கூறியுள்ளார் ஸ்டில்ஸ் ரவி.

அவர் இது பற்றிக் கூறுகையில், “மோகனுடனான எனது முதல் அனுபவம் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில்தான் கிடைத்தது. அந்தப் படம்தான் அவரது அறிமுகப் படம்.

அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது நானும் சுஹாசினியும் கேமிராவுக்கு பின்னால் நின்று கொண்டு அவர் பேசும் தமிழை கிண்டல் செய்து கொண்டிருப்போம். அப்போது மோகனுக்கு கொஞ்சமாகத்தான் தமிழ் தெரியும்.

அது அவரது முதல் படம் என்பதால் அவர் எப்போதும் தனியாகத்தான் இருப்பார். உடன் நடித்த பிரதாப் போன்றவர்களெல்லாம் தினமும் எங்கேயாவது கூட்டமாக வெளியே சினிமாவுக்குப் போவார்கள். ஆனால் மோகனை மட்டும் கூப்பிட மாட்டார்கள்.

இதனால்தான் நான் மோகனுடன் நெருக்கமான நண்பனானேன். அப்போது மோகன் பாம்குரோவ் ஹோட்டலில் தங்கியிருந்தார். நான் தினமும் சாயந்தர நேரத்தில் அங்கே சென்று அவருடன் பேசிக் கொண்டிருப்பேன்.

அந்தப் படம் முடிந்தவுடன் அவருக்கு வாய்ப்பு கேட்டு என்னுடைய ஸ்கூட்டரில் பின்னால் அமர வைத்து பல திரைப்பட நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்.

அப்போது கோவைத்தம்பி ஸார் ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தைத் துவக்கினார். இந்தப் படத்தில் முதலில் மோகன் நடித்த கதாபாத்திரத்தில் சுரேஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால், படம் துவங்கிய நேரத்தில் சுரேஷுக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போய்விட்டதால் வேறு ஹீரோவைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் அதை நான் கேள்விப்பட்டு அந்தப் படத்துக்கு அப்போது பொறுப்பாளராக இருந்த கங்கை அமரனிடம் மோகனைப் பற்றிச் சொல்லி வாய்ப்பு தர சொன்னேன். அதேபோல் படத்தின் இயக்குநரான ஆர்.சுந்தர்ராஜனிடமும் மோகனுக்காக வாய்ப்பு கேட்டேன். அவர்களும் கொடுத்தார்கள். இப்படித்தான் மோகன் அந்தப் படத்தில் நடித்தார்..” என்றார் ஸ்டில்ஸ் ரவி.

- Advertisement -

Read more

Local News