ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘எம்.ஜி.ஆர். மகன்.’
இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாகவும், மிருணாளினி ரவி நாயகியாகவும் நடித்துள்ளனர். நாயகிக்கு இதுதான் முதல் தமிழ்த் திரைப்படம். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, சிங்கம் புலி, நிவேதிதா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி தாசன் இசையமைத்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் படத் தொகுப்புப் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர். சரவணன் தயாரிப்பு நிர்வாகியாகவும், சித்தார்த், செந்தில்குமார் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’. ‘சீமராஜா’ ஆகிய படங்களுக்குப் பிறகு பொன்ராம் இயக்கும் 4-வது திரைப்படம் இது.
சென்சாரில் இத்திரைப்படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இந்த மாதத்திற்குள்ளாக தியேட்டர்களை திறக்க அரசு அனுமதித்துவிட்டால், அடுத்த மாதம் தீபாவளி தினத்தன்று இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.