நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஜனவரி 29-ம் தேதியன்று ஓடிடி தளமான அமேஸான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ள செய்தி தமிழ்த் திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கொரோனா லாக் டவுனுக்குப் பிறகு மக்கள் குடும்பம், குடும்பமாக தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது ‘மாஸ்டர்’ படத்திற்கு மட்டும்தான்.
‘மாஸ்டர்’ படத்திற்குக் கிடைத்திருக்கும் அமோக வரவேற்புதான் அடுத்தடுத்து படங்களை தியேட்டருக்குக் கொண்டு வருவதற்குத் தயாரிப்பாளர்களுக்கு தூண்டுகோலைத் தந்துள்ளது.
இந்த நிலையில் படம் வெளியாகி 16-வது நாளிலேயே ‘மாஸ்டர்’ படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன் என்று புரியாமல் முழிக்கிறார்கள் தமிழ்த் திரையுலகத்தினர்.
‘மாஸ்டர்’ படம்தான் இதுவரையிலான விஜய்யின் படங்களிலேயே அதிக வசூலைக் கொண்ட படம் என்கிறார்கள். மிக அதிகமான தியேட்டர்களில் வெளியான படமும்கூட. ஏனெனில், இந்தப் படத்துடன் ‘ஈஸ்வரன்’ படம் மட்டுமே போட்டியிட்டது. இதனால் தமிழகத்தில் 75 சதவிகித தியேட்டர்களில் ‘மாஸ்டர்’ படம் மட்டுமே வெளியானது.
இந்தப் படத்தின் மூலமாக இதுவரையிலும் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் 2 மடங்கு பணம் கைக்கு கிடைத்திருப்பது உறுதியானதால்தான், இந்தப் படம் இப்போது சட்டென்று வெறும் 16-வது நாளிலேயே ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறது என்கிறார்கள் திரையுலகத்தினர்.
இந்த ஓடிடி தளத்தில் வெளியிடுவதன் மூலமாக இதுவரையிலும் இந்தப் படத்தைத் தங்களது நாடுகளில் பார்க்க முடியாதவர்கள்.. கொரோனா பயம் காரணமாக இதுவரையிலும் தியேட்டருக்கு வராதவர்களெல்லாம் பார்த்துக் கொள்வதற்காகத்தான் என்று தயாரிப்பாளர் தரப்பு சொல்கிறது.
எது எப்படியோ.. ‘மாஸ்டர்’ படம் அனைத்து இடங்களிலும் ஒரு சாதனையை நிகழ்த்திவிட்டது.
இது இன்னுமொரு சாதனை..!