Saturday, April 13, 2024

‘மண்வாசனை’ படத்திற்காக பாண்டியன் தேர்வானது எப்படி? – சொல்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று 1983-ம் ஆண்டு வெளியான ‘மண் வாசனை’.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில்தான் நடிகை ரேவதியும், நடிகர் பாண்டியனும் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமானார்கள்.

அதோடு இந்தப் படம்தான் மக்கள் தொடர்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகருமான சித்ரா லட்சுமணன் தயாரித்த முதல் படமாகும்.

இந்தப் படத்தில் நாயகி ரேவதி, நாயகன் பாண்டியன் ஆகியோரை தேர்வு செய்தவிதம் பற்றி தன்னுடைய யுடியூப் சேனலில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பேசியுள்ளார்.

அது இங்கே :

‘அலைகள் ஓய்வதில்லை’யின் தெலுங்குப் பதிப்பை முடித்துவிட்டு அப்படியே ஹிந்திக்குப் போய்விட்டேன். அங்கே ஒரு படத்தை இயக்கி வந்த நிலையில் அடுத்து தமிழில் ஒரு சொந்தப் படம் எடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் எனது நீண்ட நாள் நண்பரும், என் படங்களுக்கெல்லாம் மக்கள் தொடர்பாளராகவும் இருந்த சித்ரா லட்சுமணன் ‘எனக்கு ஒரு படம் செய்து கொடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். சரி.. அடுத்தப் படத்தை அவருக்கே செய்து கொடுப்போம் என்று சொல்லி தீர்மானித்தேன்.

சித்ரா லட்சுமணனின் ‘காயத்ரி பிலிம்ஸ்’ சார்பா இந்தப் படம் தயாரானது. படத்தின் கதை, திரைக்கதை எல்லாம் ரெடியாயிருச்சு. இதற்கு முன்னதாகவே ரேவதியை நான் ஒரு படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி பார்த்து வைத்திருந்தேன். ரேவதியின் கண்களில் ஒரு ஸ்பார்க் தெரிந்தது. அந்தப் பெண்ணை எந்தக் கேரக்டரிலும் நடிக்க வைக்கலாம் என்பது எனக்குத் தெரிந்தது.

இந்த நேரத்தில் எனது தயாரிப்பில் வேறொரு இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படத்தைத் துவக்கினேன். அதுதான் ‘மெல்லப் பேசுங்கள்’ திரைப்படம். அதை இயக்கியவர்கள் சந்தானபாரதியும், பி.வாசுவும். அப்போது அவர்கள் மீது எனக்கு ஒரு தனி பிரியம் இருந்தது. அதனால் அவர்கள் இயக்கும் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.

அவர்களும் ஒரு ஹீரோயினைத் தேடிக் கொண்டிருந்தார்கள். நான் ரேவதியை அவர்களிடத்தில் சொன்னேன். ஆனால் ரேவதியை ‘வேண்டாம்’ என்றார்கள். ‘ரேவதி குள்ளமா இருக்கு ஸார். நாங்க எதிர்பார்த்த கேரக்டருக்கு அது ஷூட் ஆகாது’ என்றார்கள். சரி.. வேற ஆள் தேடுவோம் என்று தேடிக் கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில் என் மகன் மனோஜ் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நீச்சல் பயிற்சிக்கு அடிக்கடி செல்வான். அப்படி போய்வரும்போது ‘ஹோட்டல்ல ஒரு பொண்ணைப் பார்த்தேன்பா.. பிரமாதம்…’ என்றான். ‘அது யார்ரா அப்படியொரு பிரமாதமான பொண்ணு?’ன்னு தேடிப் பிடிச்சுப் பார்த்தால்.. அதுதான் பானுப்பிரியா.

பாரதியும், வாசுவும் பானுப்பிரியா தங்களுக்கு ஓகே என்று சொன்னார்கள். அதனால் ‘மெல்லப் பேசுங்கள்’ படத்தில் பானுப்பிரியா அறிமுகமானார். ரேவதி என்னுடைய ‘மண் வாசனை’ படத்திற்கு நாயகியாகத் தேர்வானார்.

ஹீரோயின் கிடைச்சாச்சு. ஹீரோ கிடைக்கலை. நானும் மும்பைல ஹிந்தி ஷூட்டிங்ல இருந்தேன். அதை முடிச்சிட்டு வந்து ஹீரோவைத் தேடலாம்ன்னு இருந்தேன். அதுக்கு முன்னாடி தேனி பக்கத்துல போடில ஷூட்டிங்குன்னு எல்லாத்தையும் பிக்ஸ் பண்ணியாச்சு.

நானும் ஹிந்தி ஷூட்டிங்கை முடிச்சிட்டு சென்னைக்கு வந்து ஹீரோ தேடினேன். ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ், அப்புறம் மத்த இரண்டு மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்ன்னு நிறைய பேரை வரவழைச்சு பார்த்தேன். ஒண்ணும் சூட்டாகலை. சரி.. மதுரைப் பக்கம் போவோம். நம்ம கதைக் களமே மதுரைதானே.. அங்க யாரையாவது பிடிச்சிருவோம்ன்னு சொல்லிட்டு நானும், சித்ரா லட்சுமணனும் மதுரைக்குக் கிளம்பினோம்.

எங்களுக்கு முன்னாடியே பட யூனிட்டை கிளப்பி போடிக்கு அனுப்பி வைச்சிட்டோம். இன்னும் ஹீரோ மட்டும்தான் பாக்கி. கிடைத்தால் அப்படியே தூக்கிட்டுப் போயிரலாம்ன்னு நினைச்சோம்.

மதுரைக்குப் போனவுடனே மீனாட்சியம்மன் கோவிலுக்கு நானும் சித்ராவும் போனோம். தரிசனம் முடிஞ்சு வெளில வரும்போது நிறைய பேர் என்னை அடையாளம் கண்டுக்கிட்டு வந்து ஆட்டோகிராப் கேட்டாங்க. அப்ப கார்ல உக்காந்திருந்தேன். அப்போதான் பாண்டியன் வந்து என்கிட்ட ஆட்டோகிராப் கேட்டான். அப்போ அவனோட பின்னாடி லைட் அடிச்சு அப்படியொரு அழகா தெரிஞ்சான். அதோட மதுரைக்கார பாஷைய அழகாவும் பேசினான்..

எனக்குள்ள பட்டுன்னு ஏதோ ஒண்ணு பட்டுச்சு. ‘கார்ல ஏறுடா’ன்னு சொல்லி அவனை ஏத்திக்கிட்டேன். சித்ரா பதறிட்டான். ‘இவனை எதுக்கு கார்ல ஏத்துறீங்க?’ன்னு கேட்டான். ‘விடு.. பார்த்துக்குவோம்’ன்னுட்டு நேரா ஒரு நல்ல சாப்பாட்டு கடைக்கு போனோம். நல்லா சாப்பிட்டோம். அவனையும் சாப்பிட வைச்சோம்.

அப்ப நான் மதுரைல தமிழ்நாடு ஹோட்டல்ல தங்கியிருந்தேன். ஹோட்டல் ரூமுக்கு பாண்டியனை கூட்டிட்டுப் போனேன். ‘சினிமால நடிக்கிறியா?’ன்னு கேட்டேன். ‘சினிமாவா..?’ ‘நடிப்பா?’ன்னான் பாண்டியன். ‘சினிமால்லாம் பார்த்திருக்கியா?’ன்னு கேட்டேன். ‘அப்பப்போ.. நைட் ஷோ போவேன்’ணான்.

‘சரி’ன்னு சொல்லி அவனுக்கு சில டெஸ்ட் வைச்சேன். மாறு கண் இருக்குமோன்னு நினைச்சு செக் செஞ்சேன். அது இல்ல.. அப்புறமா கோபமா பார்க்குற மாதிரி ஒரு லுக் விடச் சொன்னேன். உடனே செஞ்சான். ‘இது போதும்டா.. நீதான் என் படத்துக்கு ஹீரோ. நாளைக்கு போடிக்கு வந்து சேரு..’ன்னு சொல்லிட்டு நானும், சித்ராவும் அன்னிக்கே போடிக்கு கிளம்பிட்டோம்.

மறுநாள் பாண்டியன் சொன்ன மாதிரியே ஷூட்டிங்குக்கு வந்து சேர்ந்தான். முதல் நாளே முதல் காட்சியே வயக்காட்டுல பரண் மேல படுத்திருக்குற பாண்டியன், ரேவதியையும், அவ பிரெண்டையும் விரட்டுற மாதிரி சீன் வைச்சேன். நான் வியூ பைண்டர்ல பாக்குறேன்.. அந்த விரட்டுறதையும், மதுரை வசனத்தையும் கச்சிதமா பேசினான்.. எனக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. இவன்தான் நான் எதிர்பார்த்த ஆளுன்னு முடிவு பண்ணிட்டேன்.

2, 3 நாள் ஆச்சு.. ஒரு நாள் ராத்திரி நான் தங்கியிருந்த வீட்டுக்கு வசனகர்த்தா கலைமணி, சித்ரா லட்சுமணன், என் அஸிஸ்டெண்ட் மனோஜ்குமார்ன்னு ஏழெட்டு பேர் வந்தாங்க.. ‘என்னப்பா.. இந்த நேரத்துல..?’ என்று கேட்டேன்.

பூனைக்கு யார் மணி கட்டுறதுன்னு தெரியலை.. அதுனால கலைமணி மெதுவா சொன்னான்.. ‘இந்தப் பையனை வைச்சுத்தான் நீங்க படம் எடுக்கப் போறீங்களா?’ என்று கேட்டார்கள். எனக்குப் புரிஞ்சு போச்சு.. இவங்களுக்கெல்லாம் பாண்டியனை பிடிக்கலைன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

‘சரிப்பா.. ஷூட்டிங்கை நிறுத்திடறேன்.. நீங்க போய் ஜெமினி கணேசன் மாதிரி ஒரு ஆளை கூட்டிட்டு வாங்க. அப்புறமா ஷூட்டிங்கை நடத்திக்கலாம்’ன்னு சொல்லி ‘பேக்கப்’ சொல்லிட்டேன். உடனேயே சித்ரா பயந்துட்டான். ‘ஐயோ.. எனக்கும், இதுக்கும் சம்பந்தமில்லை ஸார்.. இவங்க கூப்பிட்டாங்க வந்தேன்’ணான்..

அப்புறம் ஒரு வாரம் எடுத்தவரைக்கும் ரஷ் போட்டு பார்த்தப்ப.. பாண்டியன் பிரமாதமா தெரிஞ்சான். அப்புறம்தான் அவங்களும் அதை ஒத்துக்கிட்டாங்க..” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

- Advertisement -

Read more

Local News