நடிகர் விமல் தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், மற்றும் கோபி மீது போலீஸில் புகார் கொடுத்திருப்பதும், இதன் விளைவாக முதல் தகவல் அறிக்கை பதிவாகியிருப்பதும், சிங்காரவேலனும் அவரது நண்பர்களும் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்திற்குச் சென்றிருப்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்த நேரத்தில் விமல் குற்றம்சாட்டியுள்ளபடி “மன்னர் வகையறா’ திரைப்படம் 8 கோடியெல்லாம் வசூலிக்கவில்லை. விநியோகஸ்தர் ஷேராக வெறும் 1 கோடியே 30 லட்சம் ரூபாயைத்தான் வசூலித்தது…” என்கிறார் அந்தப் படத்தை வாங்கி விநியோகம் செய்த ‘சினிமா சிட்டி’ நிறுவனத்தின் விநியோகஸ்தரான கே.கங்காதரன்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“நடிகர் விமல் அவர்கள் பைனான்சியர் கோபி மீதும் அவருடைய நண்பர் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீதும் கொடுத்துள்ள மோசடி புகார் குறித்து ‘மன்னர் வகையறா’ படத்தின் விநியோகஸ்தர் என்ற முறையில் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
‘மன்னர் வகையறா’ படத்தின் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டதால் அந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை நடிகர் விமலிடம் பேசி ரூ.3 கோடிக்கு வியாபாரம் பேசி ரூ.1.5 கோடி MG ஆகவும், மீதி ரூ.1.5 கோடி திருப்பித் தரக் கூடிய டெபாசிட் எனவும் ஒப்பந்தம் செய்தோம்.
‘மன்னர் வகையறா’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ஒப்பந்தம் செய்து முன்பணமாக ரூ. 1 கோடியை நடிகர் வேமலிடம் கொடுத்தேன். மீதி இரண்டு கோடியை ‘மன்னர் வகையறா’ பட வெளியீட்டிற்கு முதல் நாள் தருவதாக கூறியிருந்தேன்.
‘மன்னர் வகையறா’ பட வெளியீட்டிற்கு முன்பு விமலுக்கு ஏற்கனவே கடன் கொடுத்திருந்த மதுரை அன்பு, அழகர், LMM முரளி, அல்தாப், மற்றும் விமல் செட்டில் செய்ய வேண்டிய சுரபி மோகன் ரூ 1.1 கோடி ரூபாயை செட்டில் செய்தல் மட்டுமே ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகும் என விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கூறிவிட்ட காரணத்தால், விமலுக்கு கொடுக்க வேண்டிய ரூ. 2 கோடியில், ரூ 1.1 கோடியை விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பில் செலுத்தும்படி விமல் கூறி விட்டார்.
மீதி பணம் 90 லட்சத்தில் ரூ.35 லட்சத்தை டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர்களுக்கு செலுத்திவிட்டு மீதி தொகை ரூ.55 லட்சத்தை நடிகர் விமலிடம் ஒப்படைத்துவிட்டேன்.
அந்தப் பணத்தை வைத்து TV, Paper, Poster, Vinyl மற்றும் Fefsiக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை என அனைத்தும் நடிகர் விமலால் பிரித்து கொடுக்கப்பட்டு விட்டது.
சேட்டிலைட் உரிமையை பெற்ற Zee Network நிறுவனம் படத்தை ஒளிபரப்பிய பின்னரே பணம் தரப்படும் என கூறிவிட்டது. இதன் காரணமாக படத்தின் பைனான்சியர் கோபிக்கு செட்டில் செய்ய விமலிடம் பணம் இல்லை. அதனால் கோபியிடம் இருந்து Lab Clearance பெற முடியவில்லை.
Lab Clearance இல்லாமல் படத்தை வெளியிட முடியாது என்பதால், படத்தின் ஏரியா விநியோக உரிமையை பெற்றிருந்த விநியோகஸ்தர்களையும், நடிகர் விமலையும் அழைத்து கொண்டு, தயாரிப்பாளர் சிங்காரவேலன் அலுவலகத்திற்கு சென்றோம்.
பணம் செட்டிலாகாமல் கோபியிடமிருந்து Lab Clearance எப்படி வாங்க முடியும் என்று கேள்வி கேட்ட சிங்காரவேலன் கையை பிடித்து கொண்டு, தன்னை காப்பாற்றுமாறு விமல் செஞ்சியது என் கண்களில் அப்படியே நிற்கிறது. அப்போது அனைத்து விநியோகஸ்தர்களும் என்னுடன் இருந்தனர்.
கோபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அடுத்தடுத்த படத்தில் நடித்து அந்த சம்பளத்தில் இருந்து தந்துவிடுவதாக விமல் கூறியதையடுத்து, கோபியிடம் எடுத்து சொல்லி, சிங்காரவேலன் உத்தரவாதம் அளித்ததையடுத்து கோபியிடமிருந்து Lab Clearance வந்தது.
ஆனால், இதையெல்லாம் மறந்தும், மறைத்தும் தனக்காக இரக்கப்பட்டவர்கள் மீதே மோசடி புகார் கொடுத்த நடிகர் விமல் போன்றவர்களால்தான் சினிமாவுக்கு பைனான்ஸ் தர பைனான்சியர்கள் பயப்படுகிறார்கள்.
பல சோதனைகளைத் தாண்டி ‘மன்னர் வகையறா’ படம் வெளிவந்ததும் என்னுடைய ஷேராக 1 கோடியே 30 லட்சம் ரூபாய் அளவில்தான் வசூல் செய்தது. எனவே நான் கொடுத்திருந்த டெபாசிட் தொகையை திருப்பித் தர கேட்டு விமலிடம் பல முறை நடையாய் நடந்து வருகிறேன். ஆனால், இப்போதுவரையிலும் விமலிடம் இருந்து எனக்கு சேர வேண்டிய பணம் வரவில்லை.
தற்போது நடக்கின்ற விஷயங்களை பார்த்தால் கோபி மற்றும் சிங்காரவேலன் ஆகியோரை ஏமாற்றியதை போல என்னையும் ஏமாற்றி விடுவாரோ? என்று அச்சமாக உள்ளது.
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்” என்ற வாக்கியங்கள்தான் என்னை தைரியமாக வைத்திருக்கின்றன…” என்று சொல்லியிருக்கிறார் விநியோகஸ்தர் கங்காதரன்.


