96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவிலிருந்து சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவின் போட்டிக்கு மலையாள படமான ‘2018’ அதிகாரபூர்வமாக அனுப்பி வைக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்து உள்ளது.
குழுவின் தலைவர் கிரீஷ் காசரவள்ளி, “காலநிலை மாற்றம் தொடர்பான கதைக்கருவுடன், சமூகத்தின் வளர்ச்சியை புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘2018’ திரைப்படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி உள்ளது” என்றார்.
‘தி கேரளா ஸ்டோரி’, ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’, ‘மிஸ்டர் சாட்டர்ஜி விஎஸ் நார்வே’, ‘பாலகம்’ (தெலுங்கு), ‘ஆகஸ்ட் 16, 1947’, வால்வி (மராத்தி), பாப்லியோக் (மராத்தி) உள்ளிட்ட படங்கள் பரிந்துரைப் பட்டியில் இருந்தன.
2018:
ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்த படம் இது. நோபின் பால் இசையமைத்தார்.
2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.
பெரிய அளவில் பாராட்டுக்களைப் பெற்றதோடு வசூலிலும் சாதனை புரிந்தது. தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.