Thursday, April 11, 2024

ஏற்றிவிட்டவரை இறக்கிவிட்ட இயக்குநர் அமீர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில சம்பவங்கள், சின்னச் சின்ன விசயங்களாகத் தோன்றும்… ஆனால் வாழ்வின் பெரிய பாடங்களை அவை உணர்த்தும்.

அப்டி சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்….

இரவு நேரம்.. போக்குவரத்து சற்று குறைந்திருக்கும் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை…

பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கிறார் அந்த மனிதர்..

அப்போது, ‘சர்..’ என வந்து பிரேக் அடித்து நிற்கிறது ஒரு உயர்தர சொகுசு கார்.

உள்ளிருந்தவர் பிரபல இயக்குநர் அமீர். கதவைத் திறந்து, ‘வாங்கண்ணே.. போகலாம்’ என்கிறார்.

நிறுத்தத்தில் நின்றவருக்கு ஆச்சரியம்.. அந்த நேரத்தில் இவர் எதிர்பார்க்கவில்லை.. காரில் ஏறி அமர்கிறார்..

இவர்.. மூத்த பத்திரிகையாளர், ‘மக்கள் குரல்’ ராம்ஜி.

மக்கள் குரல் நாளிதழில் பல காலமாக பணியாற்றி வருபவர்.. திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறை குறித்து இவர் படைத்த கட்டுரைகள், நேர்காணல்கள் அத்தனை சிறப்பானவை. இவரது எழுத்துகள் ஒவ்வொன்றும், கலைத்துறையினருக்கு கிரியா ஊக்கி. இவர் குறித்து தனியே ஒரு கட்டுரை எழுதலாம்.

‘மக்கள் குரல்’ ராம்ஜி ( தனது பெயரனுடன்..)

காலில் ஏறிய ராம்ஜியிடம் அமீர், “என்னண்ணே இங்கே…” என்கிறார்.
அதற்கு ராம்ஜி, “மனைவி பிள்ளைகள் வெளியூர் செல்கிறார்கள். எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலேற்றிவிட்டு வருகிறேன். போகும்போது காரில் சென்றேன்.. தற்போது பேருந்துக்காக காத்திருந்தேன்..” என்கிறார்.

இவர்கள் பேச்சு தொடர.. கார், ராம்ஜியின் வீட்டு வாசலில் நிற்கிறது. நன்றி சொல்லி விடைபெறுகிறார் ராம்ஜி.

அத்துடன் விடுவது அவரது வழக்கமில்லை. அடுத்த ஐந்தாவது நிமிடம், அமீருக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி அனுப்புகிறார்.

அதில்..

“பாசத்துக்கும் மரியாதைக்கு உரிய அன்பு இயக்குனர் அமீர் அவர்களுக்கு,

வணக்கம்.

20 23 ஆம் ஆண்டின் புத்தாண்டு இனிய நல்வாழ்த்துக்கள்.
இரவு 10 மணி, பேருந்து வருமா வராதா பூவா தலையா போட்ட நிலையில்…

ஒருவேளை பேருந்து வராவிட்டால் ஓலா ஏறலாமா என்று அரைகுறை மனதில் சலன த்தோடு இருக்கும் நேரம்…

எதிர்பாராத சந்திப்பில் அன்போடு அருகே அழைத்ததும், சொகுசு காரில் பேசியபடியே இல்லம் நோக்கி காரை இயக்கியதும்,

வீட்டு வாசல் அருகில் இறக்கி விட்டு இரவு வணக்கத்தை சொல்லி விடை பெற்றதும்…

நன்றி சொல்வது அழகல்ல, இருந்தாலும்… நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
இந்நாள் …. நினைவில் ஒரு நாள்.

என்றும் அன்புடன்,
கலைமாமணி வே. ராம்ஜி
மக்கள் குரல்
02.01.2023 “ என்று அந்த வாட்ஸ் அப் செய்தியில் குறிப்பிடுகிறார்.

அடுத்த சில நிமிடங்களில் அமீரிடமிருந்து வாட்ஸ் அப் செய்தி வருகிறது.
அதில்..

“மரியாதைக்குரிய அண்ணன் அவர்களுக்கு,
தங்களுடைய எழுத்தின் மூலம் பலரை சொகுசு கார்களில் பவணி வர ஏற்றிவிட்டவர்கள் நீங்கள்.

இரவு நேரத்தில் உங்களை தனியே பேருந்து நிறுத்தத்தில் பார்த்த பிறகும் கண்டும்காணாமல் செல்வது நன்றி இல்லா செயல்.

நான் சொகுசு காரில் செல்வதற்கு நீங்கள் எழுதிய எழுத்துக்களும் ஒரு காரணம்.
ஆகவே என்னுடைய கடமையை தான் செய்தேன்.

நன்றி

அன்புடன்
அமீர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

எழுத்துக்களால் தன்னை ஊக்குவித்தவரை, உயரம் சென்ற பிறகும் மறக்காத அமீர்… அகால நேரத்தில் காரில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டதற்கு வெறும் வார்த்தைகளால் மட்டுமின்றி எழுத்துகளாலும் நன்றி தெரிவித்து சிறு கடிதம் எழுதிய ராம்ஜி… பதிலுக்கும் தனது அன்பை – நன்றியை வெளிப்படுத்திய அமீர்!

இது போன்று அன்பை வெளிப்படுத்தும் சிறு சிறு சம்பவங்கள்தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன.

வருடத்தின் இரண்டாம் நாள் நடந்த, முதல்தர சம்பவம் இது..! இந்த பண்பை, வருடம் முழுதும்.. இல்லையில்லை.. வாழ்க்கை முழுதும் கடைபிடிக்கலாமே!

- Advertisement -

Read more

Local News