Thursday, November 21, 2024

மஹா – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையைப் பற்றிப் பேசும் படம் இது.

சென்னையில் தொடர்ச்சியாக சில சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றனர். கொலையாளியின் கொலைச் செயல் கொடூரமாக இருக்கிறது.

அவனைப் பிடிக்க போலீஸில் துணை கமிஷனரான ஸ்ரீகாந்தின் தலைமையில் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையா, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் உட்பட ஒரு டீம் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஹன்சிகா தன் மகள் மானஸ்வியுடன் தனிமையில் வாழ்ந்து வருபவர். மானஸ்வியையும் ஒரு நாள் அந்தக் கொலைகாரன் கடத்திவிடுகிறான். கணவரை இழந்த நிலையில் தன் குழந்தைக்காக வாழ்ந்து வரும் ஹன்சிகா துடித்துப் போய்விடுகிறார். மானஸ்வியை கண்டறிய பெரும் முயற்சி செய்தும் முடியாமல் போகிறது.

தன் மகளைப் பறி கொடுத்த ஹன்சிகா அந்தக் கொலையாளி யார் என்பதைக் கண்டறிய தானே களத்தில் இறங்குகிறார். அதே நேரம் இன்ஸ்பெக்டர் அலெக்ஸின் பேத்தியையும் கடத்திவிடுகிறான் கொலைகாரன்.

போலீஸ் இப்போது கூடுதல் கவனத்துடன் தேடுதல் வேட்டையைத் துவக்க.. ஹன்சிகாவும் இன்னொரு பக்கம் அந்தக் கொலைகாரனைத் தேடுகிறார். கொலைகாரன் கிடைத்தானா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் சஸ்பென்ஸ் – திரில்லரான திரைக்கதை.

இந்தப் படம் ஹன்சிகாவின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தவே உருவாக்கியிருப்பதைப் போல தெரிகிறது. அவரது 50-வது படம் என்று சொல்வதற்கு இந்தப் படம் தகுதியானதுதான். அந்த அளவுக்கு நடித்திருக்கிறார் ஹன்சிகா.

காதலரான சிம்புவுடனா காதல் காட்சிகளில் காதலை வெளிப்படுத்தும்விதத்தை பார்க்கும்போது ஒரு நல்ல ஹீரோயின், தற்போது பீல்டிலேயே இல்லையே என்ற வருத்தம் நமக்கு வருகிறது.

மானஸ்விக்கும், ஹன்சிகாவுக்குமான பாசக் காட்சிகள் இன்னொரு பக்கம் இப்படியொரு அம்மா, மகளா.. திருஷ்டி சுத்திப் போடணும் என்று சொல்ல வைக்கிறது.

மகள் காணாமல் போன பதட்டத்தில் ஹன்சிகா போலீஸ் ஸ்டேஷனில் வந்து பதைபதைக்கும் காட்சியிலும், கிளைமாக்ஸில் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சியிலும் ஹன்சிகாவுக்கு இன்னமும் சரியான இடத்தைத் தமிழ்ச் சினிமாவுலகம் கொடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது. அதே நேரம் ஹன்சிகாவின் வயதான தோற்றமும் முகத்தில் தெரிவதை மறுப்பதற்கில்லை..!

மகளாக நடித்திருக்கும் மானஸ்வி கொட்டாச்சியின் நடிப்பு கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. “அம்மாவுக்கு முன்பாக தானே எழுந்து வீட்டில் அத்தனை வேலைகளையும் செய்கிறேன்” என்று வீடியோவில் சொல்லும் அந்தக் காட்சி ஒரு குறும்படம். இந்தக் குழந்தையை சின்னாப்பின்னமாக்கும் அந்தக் காட்சி நமக்குத் தாங்க முடியாததாகத் தோன்றுகிறது. உயிருடன் வைத்திருந்து தேட விட்டிருக்கலாமே என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

சிம்பு பிளாஷ்பேக் காட்சியில்தான் அதிகம் வருகிறார். இவரது அறிமுகக் காட்சியை இப்படி எந்தவித பில்டப்பும் இல்லாமல் காட்டியிருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரு ரசிகப் பட்டாளத்தைக் கையில் வைத்திருப்பவரை இப்படியா பயன்படுத்துவது..?

ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து தனது சொந்தக் கதை, சோகக் கதையையும் வசனத்தில் பின்னிப் பிணைந்து அள்ளித் தெளித்திருக்கிறார் சிம்பு. “இந்த உலகம் என்னைக்குத்தான் என்னை புரிஞ்சுக்க போகுது..?” என்ற ஏக்கத்தை சிம்பு சரியான விதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இன்னும் சில காட்சிகளை சிம்புவுக்கு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சைக்கோ கொலைகாரனாக நடித்திருக்கும் சுஜீத் சங்கரின் இயல்பான முகமே வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதால் இந்தக் கொலைகார சைக்கோ கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

தம்பி ராமையா வழக்கம்போல தனது பரிதவிப்பு நடிப்பை முழுமையாகச் செய்து பரிதாபத்தை பெற்றுக் கொள்கிறார். அசிஸ்டன்ட் கமிஷனரான ஸ்ரீகாந்தின் நடிப்புதான் பேசப்படவே இல்லை. அண்ணன் இன்னமும் பழைய காலத்திலேயே இருக்கிறார் போலும்..!

தொழில் நுட்பம் என்று பார்த்தால் மதியின் ஒளிப்பதிவுதான் மிகப் பெரிய பலம். சிம்பு ஹன்சிகா காதல் காட்சிகள் ரம்மியமாக படமாக்கப்பட்டுள்ளன. அதேபோல் அந்த சண்டை காட்சியும்.. கொலைகாரனின் வீட்டின் உட்புற வடிவமைப்புடன் ஒளிப்பதிவும் சேர்ந்தே மிரட்டியிருக்கிறது.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிலும் குறிப்பாக கொலையாளி வரும் காட்சிகளிலெல்லாம் தெறிக்க விட்டிருக்கிறார் ஜிப்ரான். கிளைமாக்ஸ் சண்டை காட்சியை இப்படியொரு ஹீரோயினை வைத்துக் கொண்டு செய்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். இந்த சண்டை பயிற்சியாளருக்கு நமது பாராட்டுக்கள்.

கதை என்று பார்த்தால் இப்போதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை சொல்லியிருக்கிறது என்றாலும் காட்சி வடிவத்தில் இத்தனை கொடூரமாகக் காட்டத் தேவையில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

மேலும் கற்பழிப்பு’, ‘ரேப்’ என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக பாலியல் வன்கொடுமை என்று பயன்படுத்தியிருந்திருக்கலாம்.

மானஸ்வியை அந்தப் பள்ளி பேருந்து ஊழியர்களே சிக்க வைக்கிறார்கள் என்பது நம்ப முடியாததாக உள்ளது. அதிலும் அவர்களை டிரேஸ் செய்ய முடியவில்லை என்று சொல்வதும் ஏற்புடையதாக இல்லை.

கதை ஓகேதான் என்றாலும் திரைக்கதையில் போலீஸின் தேடுதல் வேட்டையை இன்னமும் விறுவிறுப்பாக அமைத்திருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

RATINGS : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News