விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வெளியான படம் ‘சக்ரா’. இப்படத்தின் வெளியீட்டின்போது டிரைடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன் நிறுவனங்கள் படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில், இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், ‘சக்ரா’ படம் தொடர்பான இரண்டு வார வசூல் விவரங்கள் மற்றும் இணையத்தில் வெளியிடும் ஒப்பந்தம் ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. இதன் தீர்ப்பு நேற்றைக்கு வெளியிடப்பட்டது. அந்தத் தீர்ப்பில் விஷால் மற்றும் சக்ரா படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், பொய்யான ஒரு விஷயத்தை முன் வைத்து விஷாலை துன்புறுத்தியதற்காக லைகா நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட நடிகர் விஷால், “நீதி வெல்லும். உண்மை வெல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். லைகா நிறுவனம் எனக்கு எதிராகவும் ‘சக்ரா’ படத்திற்கு எதிராகவும் தாக்கல் செய்த வழக்கு, பொய் வழக்கு என இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு பொய்யான வழக்கை முன் வைத்து என் மீது குற்றம் சாட்டியதற்காக லைகா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…” என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் விஷால்.