நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு ஒரு புதிய படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பூ நடிக்கவிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ‘வெள்ளி விழா நாயகன்’ என்று புகழ் பெற்றவர் நடிகர் மோகன். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பட்ங்களில் நடித்த மோகன், கடந்த 1999-ம் ஆண்டு ’அன்புள்ள காதலுக்கு’ என்ற படத்தை இயக்கி நடித்தார். பின்பு நடிக்காமல் இருந்த அவர், பத்தாண்டுகளுக்கு பிறகு, 2008-ல் வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. பிறகு ’அபயிதோ அம்மாயி’ என்ற தெலுங்கு படத்தில் நாயகிக்கு அப்பாவாக நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ’ஹரா’ என்ற தமிழ்ப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை ‘தாதா-87’ படத்தை இயக்கிய இயக்குநர் விஜயஸ்ரீ இயக்கம் செய்யவிருக்கிறார்.

இந்தப் படத்தை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கவிருப்பதாக இயக்குநர் விஜயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் விஜயஸ்ரீ பேசும்போது, ”மோகன்-குஷ்பூ இருவரும் ஒரே நேரத்தில் தமிழ்ச் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தாலும் எந்தவொரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கு படம் ஒன்றில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். தமிழில் இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறையாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கவுள்ளது. குஷ்பு, மோகன் நடிக்கும் காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்படவுள்ளது..” என்றார்.