Saturday, September 21, 2024

கவிஞர் பிறைசூடன் திடீர் மாரடைப்பால் காலமானார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைத்துறையில் 2000 பாடல்களுக்கு மேல் பாடல்களையும் எழுதியவரும் பக்தி பாடல்கள் 5000-க்கும் மேல் எழுதியவரும், சிறந்த ஆன்மீகவாதியும், இலக்கியவாதியுமான, கவி ஞானி பிறைசூடன் இன்று (8.10.2021) மாலை 4.30 மணியளவில் திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65.

இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் பணியாற்றிய, பல ஹிட்டான திரைப்படப் பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன்.

தமிழ்த் திரையுலகத்தில் கவிஞர், பாடலாசிரியர், உரையாடல் ஆசிரியர், ஜோதிடர், ஆன்மீக பற்றாளர் என்று பல்வேறு பணிகளிலும் திறமை பெற்றவர் பிறைசூடன். பின்னாளில் நடிகராகவும் உருமாறியிருக்கிறார்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் தற்போதைய படமான ‘அண்ணாத்த’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கவிஞர் பிறைசூடனும் நடித்திருக்கிறார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் ‘சிறை’ படத்திற்காகத்தான் இவர் முதன்முதலாகப் பாடல் எழுதினார்.

‘எவ்வளவு வேகமாக பாட்டெழுதுவீர்கள்?’ என்று எம்.எஸ்.வி கேட்டதற்கு, ‘உங்கள் ட்யூனைவிட வேகமாக எழுதுவேன்’ என்று சொல்லி, முதல் சந்திப்பிலேயே எம்.எஸ்.வியின் வெறுப்பை வரவு வைத்துக் கொண்டார் பிறைசூடன்.

இவர் எழுதிய முதல் பாடலான ‘ராசாத்தி ரோசாப்பூ…’ ஜெமினி ஒலிப்பதிவுக் கூடத்தில் ஏசுதாஸ் – வாணி ஜெயராம் குரல்களில் ஒலிக்கத் துவங்கியதும் மின்சாரத் தடை ஏற்பட்டிருக்கிறது.

‘கண்டவன் எல்லாம் பாட்டெழுத வந்தா இப்படித்தான் ஆகும்’ என்று கண்டவர்களும் பேசியிருக்கிறார்கள். பின்னர் அந்தப் பாடல் ஒலிப்பதிவாகி, இவருக்கு வரவேற்பையும் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து சந்திரபோஸ் இசையில் ‘செல்வாக்கு’ படத்துக்கு பாட்டெழுதினார். இளையராஜா இசையில் இவர் முதன்முதலாக எழுதிய பாடல் ‘கண்ணுக்கொரு வண்ணக்கிளி’ படத்திற்காக..! லதா மங்கேஷ்கர் குரலில் பாட்டும் பதிவானது. ஆனால், படம் வெளிவரவில்லை. பின்னர் இளையராஜாவின் இசையில் ‘எங்க ஊரு காவக்காரன்’ படத்தில் எழுதிய ‘சிறுவாணி தண்ணி குடிச்சு…’ பாடல் இப்போது வரையிலும் அவரை அடையாளம் காட்டுகிறது.

தமிழ்த் திரையுலகத்தில் இதுவரையிலும் மொத்தமாக சினிமாவில் 2,000 பாடல்களும், தனிப் பாடல்களாக 7,000 பாடல்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 10,000 பாடல்களை எழுதிக் குவித்திருக்கிறார் பிறைசூடன்.

இவர் எழுதிய பல பாடல்கள் இன்றும் தமிழகத்தில் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

இளையராஜாவின் இசையில் ’என்னைப் பெத்த ராசா’ படத்தில் ’சொந்தம் ஒன்றாய்’  பாடல், ’ராஜாதி ராஜா’ படத்தில் புகழ் பெற்ற காதல் பாடலான ‘மீனம்மா மீனம்மா’, ‘பணக்காரன்’ படத்துக்காக பிறைசூடன் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்னும் திருமண வாழ்த்துப் பாடல் இன்றுவரை திருமண வரவேற்பு மேடைக் கச்சேரிகளில் தவறாமல் இடம் பிடிக்கும் பாடலாகத் திகழ்கிறது.

இயக்குநர் வசந்தின் அறிமுகப்படமான ‘கேளடி கண்மணி’யில் பிறைசூடன் எழுதிய ‘தென்றல்தான் திங்கள்தான் நாளும் சிந்தும்’ என்னும் பாடல் அதன் இளமைத் துள்ளலான இசையமைப்புக்காக மட்டுமல்லாமல் பாடல் வரிகளுக்காகவும் இன்றும் ரசிக்க வைக்கிறது.

 1991-ல் வெளிவந்த ’என் ராசாவின் மனசிலே’ படத்தில் இடம் பெற்ற ‘சோலப் பசுங்கிளியே’ பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை வென்றார் பிறைசூடன்’.

பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் அடையாளங்களில் ஒன்றாகிப் போன ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலும் இவர் எழுதியதுதான்.

அதே ஆண்டில் ‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ பாடலில் இசையுடன் சேர்ந்து பிறைசூடனின் வரிகளும் காதல் தோல்வியின் தீரா வலியை கேட்பவர் அனைவரையும் உணர வைத்தது. ‘கலகலக்கும் மணியோசை’ (ஈரமான ரோஜாவே), ’காதல் கவிதைகள் படித்துடும் நேரம்’ (கோபுர வாசலிலே) என அந்த ஆண்டில் பிறைசூடன் எழுதிய காலத்தால் அழிக்க முடியாத பாடல்களின் பட்டியல் நீள்கிறது.

’உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’ படத்தில் இடம் பெற்ற ‘என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி’ பிறைசூடன் எழுதிய மற்றுமொரு புகழ் பெற்ற வெற்றிப் பாடல். ‘செம்பருத்தி’ படத்தில் நான்கு பாடல்களை எழுதினார்.

அந்தப் படத்தில் நாயகன் பாட்டியின் கோபத்தை போக்கும் வகையில் பாடும் ‘நடந்தால் இரண்டடி’ என்னும் பாடல் ரசிகர்களை ஈர்த்தது.

1990-களில் இளையராஜா மட்டுமன்றி தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஆதித்யன் இசையில் அதிக பாடல்களை எழுதினார் பிறைசூடன். ‘அமரன்’ படத்தில் ஆதித்யன் இசையில் நான்கு பாடல்களை எழுதினார். ‘வெத்தல போட்ட ஷோக்குல’ என்னும் நாயக அறிமுகப் பாடலும் ‘சந்திரனே சூரியனே’ என்னும் பாடலும் இவர் எழுதியதில் மிகவும் புகழ் பெற்றவை.

தேவா இசையில் ‘தாயகம்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். அந்தப் படத்தின் பாடல்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை இரண்டாம் முறையாக வென்றார்.

தேவா இசையமைத்த ‘குரோதம் 2’, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப் படங்களான ’சத்ரிய தர்மம்’ போன்ற படங்களிலும் அனைத்துப் பாடல்களையும் மட்டுமல்லாமல் வசனங்களையும் எழுதினார்.

இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘தெனாலி’ படத்தில் ‘போர்க்களம் அங்கே’ என் காதல் ஏக்கப் பாடலை எழுதினார். ‘ஸ்டார்’ படத்தில் ‘ரசிகா ரசிகா’ என்னும் வேகநடை கொண்ட காதல் பாடலை எழுதினார்.

தமிழ்த் திரையிசை உலகின் சகாப்தங்களான எம்.எஸ்.வி. இளையராஜா, ரகுமான் ஆகிய மூவரின் இசையிலும் பாடல்களை எழுதிய அரிதான பெருமையைப் பெற்றவர்களில் ஒருவர் பிறைசூடன்.

சமீபத்தில்தான் அவர் ஆஸ்கர் போட்டியில் போட்டியிடவிருக்கும் இந்தியத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் தேர்வு கமிட்டியில் ஒரு உறுப்பினராகத் தேர்வாகியிருந்தார். அதைப் பெருமிதமாக தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை தன்னுடைய வீட்டில் அமர்ந்திருந்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் 2 நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்தது.

அவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளுடன் உள்ளனர். இவருடைய மகன் தயா பிறைசூடன் இசையமைப்பாளராக உள்ளார்.

கவிஞர் பிறைசூடனின் எதிர்பாராத இந்த மரணத்தையடுத்து திரையுலகப் பிரபலங்கல் பலரும் அவருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News