தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் பிரகாஷ்ராஜ்.
இந்நிலையில், “பாஜக ஒன்றிய அரசை கடுமையாக விமர்சிப்பார். அதே நேரம், தமிழ்நாட்டுக்கு உரிமையான காவிரி நீரை தராக கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார்” என்று பத்திரிகையாளர் செல்வம் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள வீடியோ பேட்டியில், “தமிழ் நடிகர் சித்தார்த் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ‘சித்தா’ திரைப்படம் வெளியானது. இதன் கன்னட டப்பிங் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர் அரங்கிற்குள் நுழைந்து சித்தார்த்தை மிரட்டி வெளியேற்றினர்.
அதற்கு வருத்தம் தெரிவித்து, ஆங்கிலத்தில் டுவீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார் பிரகாஷ்ராஜ். இதில் காவிரி விவகாரம் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
அதே சமயம் கன்னடத்தில் அவர் பதிவிட்டிருந்த டுவீட்டில், ‘காவிரி எங்களுடையதே… ஆம், எங்களுடையதே’ என்றுதான் ஆரம்பித்து உள்ளார்.
பிரகாஷ்ராஜ் தமிழில்தான் அதிக திரைப்படங்களில் நடித்து உள்ளார். அவர் பெயரும், பணமும் சம்பாதிக்க தமிழ்த் திரையுலகம்தான் காரணம்.
ஆனால் தமிழ்நாட்டின் உரிமையை மறுத்து பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவரது இரட்டை முகம் அம்பலமாகி உள்ளது” என பத்திரிகையாளர் செல்வம் தெரிவித்து உள்ளார்.