இந்திய திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து, தனது 234-வது திரைப்படமான ‘தக் லைப்’ படத்தில் நடித்து அதை சமீபத்தில் முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இருவரும் 37 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்குப் பிறகு கமல்ஹாசனின் 237-வது படத்தை பிரபல சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் (அன்புமணி மற்றும் அறிவுமணி) இயக்கவுள்ளனர். இவர்கள் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்கள். சமீபத்தில், இந்தப் புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது. ‘தக் லைப்’ படத்திற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன், அன்பறிவ் இயக்கும் இந்த புதிய சண்டை படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும், கமல்ஹாசன் ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்த அறிவைப் பெறும் நோக்கில் அமெரிக்கா பயணம் செய்துள்ளார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, நடிகர் கமல்ஹாசன் லாஸ் வேகாஸ் நகரத்தில் நடைபெற்ற சினிமா தொடர்பான ஒரு கண்காட்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் புகைப்படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. ஆண்டுதோறும் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெறும் இந்த கண்காட்சியில் சினிமா துறையின் வளர்ச்சிக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து முக்கியமான தகவல்களைப் பகிர்கின்றனர். குறிப்பாக, இந்த ஆண்டின் கண்காட்சியில் ஏ.ஐ தொழில்நுட்பங்கள் கலைத்துறையில் எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படப்போகின்றன என்பதையும் விரிவாக விளக்கியுள்ளனர்.