Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

கலகத் தலைவன் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் நாயகன் உதயநிதி ஸ்டாலினே தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க நிதி  அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், ஆரவ், அங்கனா ராய், அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அரோல் கரோலி பாடல்களுக்கு இசையமைத்திருக்க, ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்திருக்கிறார். K.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் மகிழ் திருமேனி எழுதி, இயக்கியிருக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் ஒரு கலகக்காரனின் கதையே இந்தக் ‘கலகத் தலைவன்’ படத்தின் கதை.

டிரக் தயாரிப்பு நிறுவனமான ‘வஜ்ரா’ இந்தியாவிலேயே மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமாகும். அந்நிறுவனம் தற்போது புதிய மாடல் டிரக் ஒன்றைத் தயாரித்துள்ளதாக சொல்லி அந்த வண்டியை அறிமுகப்படுத்துகிறது.

இப்போதுவரையிலும் மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து வகையான டிரெக்குகளைவிடவும் இந்தப் புதிய டிரெக் அதிக மைலேஜ் பிடிக்கும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த டிரெக்கில் இருந்து வெளியாகும் புகை, சுற்றுச் சூழல் துறை அனுமதித்துள்ள அளவைக் காட்டியும் கூடுதலாக இருப்பதைத் தந்திரமாக மறைக்கிறது வஜ்ரா நிறுவனம். ஆனால் இந்த ரகசியத்தை சிலர் வெளியில் அம்பலப்படுத்தி விடுகின்றனர். இதனால் ஷேர் மார்க்கெட்டில் இந்நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்திக்கிறது.

3 பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் கசிந்தது எப்படி என்பதைக் கண்டறிய வஜ்ரா நிறுவனத்தின் முதலாளி, மிகப் பெரிய மாபியா கும்பலின் தலைவான ஆரவ்வை வேலைக்கு அமர்த்துகிறார். ஆரவ்வும் இந்த ரகசியம் தெரிந்தவர்களை மிகக் கொடூரமாக சித்ரவதை செய்து யாரிடமிருந்து விஷயம் லீக்கானது என்பது பற்றி விசாரிக்கத் துவங்குகிறார்.

இந்த விசாரணை என்ன ஆனது..? எதற்காக இந்த வஜ்ரா நிறுவனத்தின் ரகசியங்கள் வெளியில் கசிந்தன..? உண்மையில் இதன் பின்னணியில் இருந்தது யார்..? என்பதெல்லாம்தான் இந்தக் கலகத் தலைவன்’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை..!

படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களிடமும் சிறப்பான நடிப்பினை வரவழைத்துள்ளார், இயக்குநர் மகிழ் திருமேனி. உதயநிதி ஸ்டாலின் இதுவரையிலும் தான் நடித்த படங்களில் இருந்து வித்தியாசமான ஒரு நடிப்பினை இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறார். அலட்டிக் கொள்ளாத தன்மையுடன், அமைதியின் திருவுருமாய் காட்சியளித்தபடியே.. கார்பரேட் நிறுவனங்களை தலைகீழாகப் புரட்டிப் போடும் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பை மென்மையாகக் காண்பித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில்கூட சைலண்ட் காட்டியே ஸ்கோர் செய்திருக்கிறார்.

இப்படத்தில் பெரிதும் ஆச்சர்யப்படுத்துவது நடிகர் ஆரவ்வின் வில்லத்தனமான நடிப்புதான். வில்லன் அவதாரத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது முக பாவங்களும், உடல் மொழியும் தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு திறமையான வில்லன் என்றே காட்டுகிறது.

நாயகி நிதி அகர்வால் ச்சும்மா ஸ்கிரீனில் வந்து நின்றாலே அது கவிதையாகும். அந்த அளவுக்கு இயற்கையான அழகைத் தன் வசப்படுத்தியுள்ளார். காதல் காட்சிகளிலும், எமோஷ்னல் காட்சிகளிலும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். இவருக்கு இருக்கும் அழகுக்கு இந்நேரம் தொடர்ந்து 5 படங்களிலாவது நடித்திருக்க வேண்டும். நடிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

கலையரசனுக்கு நடிப்பினைக் காட்ட பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் கதையின் சஸ்பென்ஸையும், படத்தின் தன்மையையும் புரிந்து கொள்ள கலையின் கர்ப்பிணி மனைவியாக நடித்தவர் பெரிதும் உதவியிருக்கிறார். மேலும் அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த், மற்றும் அங்கனா ராயின் வில்லித்தன நடிப்பு என்று பலரும் இந்தப் படத்தில் உணர்ந்து நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு, படத் தொகுப்பு உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. ஒளிப்பதிவு முதல் ஷாட்டில் இருந்து கடைசிவரையிலும் ஒன்று போலவே இருப்பது இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டி என்றே சொல்லலாம். திருச்சி ரெயில் நிலையத்தில் நடைபெறும் காட்சிகளை மிக அழகாக படமாக்கியிருக்கிறார் கேமராமேன். அந்த ரயில்வே ஸ்டேசன் சீக்வென்ஸில் இருக்கும் சஸ்பென்ஸ், திரில்லர் பீலிங்கை கடைசிவரையிலும் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதேபோல் கிளைமாக்ஸ் சண்டை காட்சியையும் ஒரு பேய்ப் படத்திற்குண்டான திகில் உணர்வோடு படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பின்னணி இசையில் ஒரு ராஜாங்கமே அமைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. பதற்றத்தை ஏற்படுத்தும்வகையிலும் படம் நெடுகிலும் ரசிகனை ஒரு டென்ஷன் மோடிலேயே வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். அடிப்படையில் கெமிக்கல் எஞ்சினியரான நாயகன் உதயநிதி, க்ளைமாக்ஸ் ஃபைட்டில் தனது புத்தி சாதூர்யத்தால் கெமிக்கல் ரியாக்சன்களை வைத்து வில்லன் கோஷ்டியை வீழ்த்துவது எதிர்பாராதது. அதே சமயம் ரசனைக்குரியது. அனைத்து சண்டைக் காட்சிகளையுமே சிறப்பாக வடிவமைத்த சண்டைப் பயிற்சியாளருக்கு  நமது பாராட்டுக்கள்.

எத்தகைய கதையாக இருந்தாலும் அதை நேர்த்தியான விதத்தில் திரைக்கதையாக்கினால் படம் மாஸாகிவிடும். இந்தத் திரைக்கதையைக் கட்டும் வித்தை இயக்குநர் மகிழ் திருமேனிக்கு நன்றாகவே தெரியும் போலிருக்கிறது. இந்தப் படத்திலும் திரைக்கதையிலும், இயக்கத்திலும் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

முதலில் மெதுவாக நகரத் துவங்கும் படம், பின்னர் நேரம் செல்லச் செல்ல வேகமெடுத்து ரன் பாஸ்ட்டில் செல்கிறது. மூலக் கதையை விட்டு சிறிதும் விலகிச் செல்லாத நேர்த்தியான திரைக்கதை, படத்திற்கு மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுவதால் நிகழும் பொருளாதார சீர்கேடுகளை இந்தப் படத்தில் வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர். அதோடு அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுக்கும் டொனேஷன். அதன் மூலம் அரசை  அவர்கள் எப்படி கட்டுப்படுத்துகிறார்கள் என்ற உண்மையையும் சொல்லியிருக்கிறார்.

படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் முடிந்தவரையிலும் லாஜிக் பார்க்க முடியாமல் வைத்திருப்பதால் காட்சிகளை ரசிக்க முடிந்திருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் போலீஸே இல்லாத சூழலை காண்பித்திருப்பது படம் முடிந்த பின்புதான் நமக்கே உரைக்கிறது. மிகக் குறைவான குறைகள் மட்டுமே படத்தில் இருப்பதால், நிச்சயமாக இந்தப் படம் உங்களை ஏமாற்றாது.

அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

RATING : 4.5 / 5

- Advertisement -

Read more

Local News