‘முதல் மரியாதை’ படத்திற்குப் பின் அடுத்தத் தமிழ்த் திரைப்படமாக 1986-ல் இயக்குநர் இமயம் பாரதிராஜா உருவாக்கிய திரைப்படம் ‘கடலோரக் கவிதைகள்’.
இந்தப் படத்தின் தலைப்பு தன் படத்திற்குக் கிடைத்தவிதம் குறித்து தனது வாழ்க்கைப் பயணத்தைச் சொல்லி வரும் யுடியூப் சேனலில் இந்த வாரம் பாரதிராஜா சொல்லியிருக்கிறார்.
“1985-ல் முதல் மரியாதை’ படம் வெளியான பின்பு அடுத்தப் படமாக ‘Saveray Wali Gaadi’ என்ற ஹிந்தி படத்தை சன்னி தியோல், பூனம் தில்லான் நடிப்பில் உருவாக்கினேன். இது தமிழில் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் ஹிந்தி ரீமேக்.
இந்தப் படத்தை முடிப்பதற்குள்ளாகவே அடுத்தப் படத்தை தமிழில் இயக்க வேண்டும் என்று பிளான் செய்தேன். அப்போது இயக்குநரும், கதாசிரியருமான கே.ராஜேஷ்வர் என்னிடம் ஒரு கதையைச் சொன்னார்.
ஒரு கடற்கரைப் பகுதியில் நடக்கும் காதல் கதை. தோற்றத்திலேயே ரவுடி மாதிரியிருக்கும் ஒரு படிக்காதவனுக்கும், ஒரு ஸ்கூல் டீச்சருக்கும் இடையேயான காதல்தான் படத்தின் கதைக் கரு. கேட்டவுடன் எனக்குப் பிடித்திருந்தது. படமாக்கலாம் என்று துணிந்தேன்.
படத்தோட பேருக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிச்சப்ப ‘கடலோரக் கவிதைகள்’ என்ற டைட்டில் கச்சிதமா பொருந்துச்சு. உடனேயே அதையே வைக்கலாம்ன்னு முடிவு செஞ்சோம்.
ஆனால், அப்போ அதே தலைப்பை எனது இனிய நண்பரும், மூத்த இயக்குநருமான ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரும் பதிவு செய்து வைத்திருப்பது எனக்குத் தெரிந்தது.
உடனேயே நான் அவருக்கு போன் செஞ்சேன். “என்ன பாரதி..?” என்றார் பாலசந்தர். “ஸார்.. என்னோட அடுத்தப் படத்துக்கு கதையை ரெடி செஞ்சுட்டேன். ஒரு கடலோர கிராமத்துக் கதைதான் ஸார் படமே.. இதுக்கு ‘கடலோரக் கவிதைகள்’ டைட்டில் வைச்சா ரொம்பப் பொருத்தமா இருக்கும். அதை நீங்க பதிவு செஞ்சிருக்கீங்களாமே.. சொன்னாங்க. அந்த டைட்டலை எனக்குக் கொடுத்தால் நல்லாயிருக்கும்ன்னு கேட்டேன்.
“இதென்ன கேள்வி.. தலைப்புதானே.. உனக்குக் குடுக்காமல் யாருக்குக் கொடுக்கப் போறேன். எடுத்துக்க..” என்றார் பாலசந்தர். அந்த அளவுக்கு என் மீது மிகுந்த அக்கறையும், பிரியமும் கொண்டவர் கே.பி…” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.