தமிழ் சினிமா வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தை பெற்ற, ‘காசேதான் கடவுளடா’ படம் ரீமேக் செய்யப்படவுள்ளது.
இத்திரைப்படத்தினை இயக்குநர் R.கண்ணன் அவர்களின் Masala Pix நிறுவனம் MKRP Productions நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
தமிழின் க்ளாசிக் திரைப்படமான, இந்தக் ‘காசேதான் கடவுளடா’ படத்தில் தமிழின் புகழ்மிக்க மூத்த நடிகர்களான, முத்துராமன், லட்சுமி, அசோகன், தேங்காய் சீனிவாசன், ஆச்சி மனோரமா மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
தற்போது மீண்டும் உருவாகும், இப்படத்தின் ரீமேக் வடிவத்தில், முத்துராமன் கதாப்பாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் யோகிபாபுவும், ஆச்சி மனோரமா பாத்திரத்தில் நடிகை ஊர்வசி அவர்களும் நடிக்கவுள்ளார்கள்.
நடிகர் கருணாகரன் உட்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். படத்தின் நாயகி வேடத்தில் நடிக்க தமிழின் முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கவிருக்கிறார்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, ‘காதலிக்க நேரமில்லை’, ‘காசேதான் கடவுளடா’ மற்றும் சில ரொமான்ஸ் காமெடி படங்கள் மட்டுமே காலம் கடந்து, எப்போது பார்த்தாலும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மனதிற்கு நிறைவு தரும் படைப்புகளாக இருக்கின்றன.
அந்த வகையில் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு கச்சிதமான படைப்பு, எனவே இப்படத்தின் மறு உருவாக்கத்திற்கான முறையான அனுமதியை பெற்று, தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் ரீமேக் செய்யவுள்ளோம்.
மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி மேடம், கருணாகரன் போன்ற அற்புத திறமை வாய்ந்த எங்கள் குழுவினர், இப்படத்தை மீண்டும் ஒரு அழகான படைப்பாக மாற்றுவார்கள் என மிக ஆழமாக நம்புகிறேன்.
அப்படம் 1960-களில் வெளியானபோதே, அப்போதைய காலத்தை தாண்டிய முதிர்ச்சி மிகுந்த படைப்பாகத்தான் இருந்தது. எடுத்துக்காட்டாக ATM அறிமுகம் ஆகாத அந்தக் காலத்தில், ஒரு காட்சியில், பூட்டை திறக்க 4 டிஜிட் கடவு எண் தேவைப்படும் என்று காட்சி வைத்திருக்கிறார்கள். இப்படி காலத்தை விஞ்சிய படைப்பாகவே அப்படம் இருக்கிறது.
ஆதலால், இப்படத்தை இப்போதைய காலகட்டத்திற்கு மாற்றுவதென்பது, அத்தனை கடினமான பணி ஒன்றும் இல்லை. இதிலிருக்கும் மிகப் பெரிய சவால், மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருந்த அப்படத்திற்கு, நியாயம் செய்யும் வகையில், தற்போதைய படைப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான். ஆனால், நாங்கள் மிக ஆவலுடன் அப்பணிகளை மேற்கொள்ள காத்திருக்கிறோம்.
இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூலை 15 அன்று துவங்கி, ஒரே கட்ட படப்பிடிப்பாக 35 நாட்கள் தொடர்ந்து நடத்தவுள்ளோம். படத்தில் பங்கு பெறவுள்ள, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்…” என்றார்.