Friday, April 12, 2024

இரட்டை இலைக்கு பின்னணி இசையை மாற்றச் சொன்ன ஜெயலலிதா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஒரு திரைப்படத்தை இயக்கவில்லையே தவிர.. திரைப்படத்தின் அனைத்து தொழில் நுட்பங்களையும் தெரிந்து வைத்திருந்தவர்தான் என்பதற்கு ஒரு உதாரணம் தற்போது வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார வீடியோக்களை இயக்கிய இயக்குநர் கா.பரத் ஜெயலலிதா பற்றி அளித்துள்ள பேட்டியில் இது பற்றி விளக்கமாக தெரிவித்துள்ளார்.

அவர் இது பற்றிப் பேசும்போது, “1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது அ.இ.அ.தி.மு.க.வுக்காக தேர்தல் பிரச்சார வீடியோக்களைத் தயார் செய்ய ஜெயலலிதா அம்மா என்னையும், தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தியையும் போயஸ் தோட்ட இல்லத்திற்கு அழைத்திருந்தார்.

நாங்கள் போனவுடன் சங்கர் கணேஷ் இசையமைத்திருந்த 3 பாடல்கள் அடங்கிய கேஸட்டை எங்களிடத்தில் கொடுத்து “இதுக்கேற்றாற்போல நடனக் காட்சிகளை அமைத்து ஷூட் செய்து கொண்டு வாருங்கள்…” என்றார். கூடவே, “இந்த டான்ஸ் சீன்ஸ்ல நடிக்கிறதுக்கு பிரபலமானவர்களை போடாதீங்க. அப்படி போட்டீங்கன்னா எல்லாரும் அவங்க டான்ஸைத்தான் பார்ப்பாங்களே தவிர, பாடல் வரிகளைக் கவனிக்க மாட்டாங்க. அதனால பிரபலமில்லாதவங்க.. ஆனால் அழகா இருக்கணும். அவங்களை வைச்சு ரெடி பண்ணுங்க…” என்று சொன்னார்.

அந்தப் பாடல்களைக் கேட்டு அதற்கேற்றாற் போன்று காட்சிகளையும் வடிவமைத்து படமாக்கி திருச்சியில் தேர்தல் சுற்றுப் பயணத்தில் இருந்த அம்மாவிடம் அதைப் போட்டுக் காட்டினோம். முதல் வீடியோ.. மூன்றாவது வீடியோக்களைப் பார்த்துவிட்டு “நல்லாயிருக்கு. குட்…” என்று பாராட்டினார்.

ஆனால், இரண்டாவதாக இருந்த பாடல் காட்சி ஒரு இளவரசி அம்மாவின் ஆட்சியை நினைத்து ஏக்கத்துடன் பாடுவதாக அமைந்திருந்தது. அதை மட்டும் குறிப்பிட்ட அம்மா, “இந்த மாதிரி இளவரசி கதையெல்லாம் நமக்கு வேண்டாம். ஏன்னா நம்முடைய தொண்டர்கள் எல்லாரும் பி அண்ட் சி-ல இருக்குறவங்க. அவங்களுக்கு ஏத்த மாதிரி சித்தாள் இல்லைன்னா… ஏழ்மைல இருக்குற பெண்கள் பாடுற மாதிரி மாத்தி இன்னொரு தடவை ஷூட் செய்யுங்க…” என்றார்.

எனக்குத் திக்கென்றானது. தயாரிப்பாளரும் வாய் திறக்கவில்லை. எங்களின் மெளனத்தைப் புரிந்து கொண்ட அம்மா, “என்ன செலவாகுமேன்னு யோசிக்கிறீங்களா..? அப்போ ஒண்ணு பண்ணுங்க.. ஒரு சித்தாள் பொண்ணு வேலை செஞ்சு களைச்சுப் போய் ஒரு மரத்தடில உக்கார்றா. அப்போ எதிரில் இருக்கும் சுவற்றில் அதிமுக விளம்பரத்தைப் பார்க்கிறாள். அதைப் பார்த்தவுடன் அவள் கனவு கண்டு அந்த இளவரசியாக மாறி பாடலைப் பாடுகிறாள் என்பது மாதிரி சீனை கட் செஞ்சு போடுங்க…” என்றார். இதைக் கேட்டு நாங்கள் அசந்துவிட்டோம்.. எவ்வளவு கிரியேட்டிவ் மைண்ட் அம்மாவுக்குன்னு..!?

நாங்கள் இதைக் கேட்டுவிட்டு சென்னைக்கு வந்த அடுத்த நாளே மறுபடியும் எங்களை புதுக்கோட்டைக்கு வரச் சொல்லி அம்மா உத்தரவு போட்டிருந்தாங்க. உடனேயே அன்னிக்கே கிளம்பி, மறுநாள் காலைல புதுக்கோட்டைக்கு போயிருந்தோம்.

புதுக்கோட்டை அரண்மனைல தங்கியிருந்த அம்மாவை சந்தித்தோம். “அந்த இரண்டாவது பாட்டுல கடைசில இரட்டை இலை சிம்பல் வரும்போது ஒரு பின்னணி இசை போட்டிருந்தீங்களே.. அது என்ன இசை..?” என்று கேட்டார். “தாயில்லாமல் நானில்லை பாட்டில் இடையில் வரும் ஒரு இசைக் கோர்வையைத்தான் இதில் பயன்படுத்தியிருக்கேன்ம்மா…” என்றேன்.

“அதுக்குப் பதிலா இன்னொன்னு சொல்றேன். என் வீட்டுக்குப் போனீங்கன்னா மியூஸிக் ரிக்கார்டர்ஸ் எல்லாத்தையும் ஒரு ஷெல்ப்ல வைச்சிருக்கேன். அதுல night of bobylon அப்படின்னு ஒரு ரிக்கார்ட் இருக்கும். அதுல 2 அல்லது 3-வதா ஒரு பாட்டு இருக்கும். அந்தப் பாட்டோட இசையை எடுத்து இந்த இரட்டை இலை காட்சி வரும்போது பி.ஜி.எம்மா போடுங்க. பிரமாதமா இருக்கும்”ன்னு சொன்னாங்க. என்றவர் கூடவே, “இதுக்காக உங்களை இங்க கூப்பிட்டு கஷ்டப்பட்டுத்திட்டேன்னு நினைக்கிறேன்” என்றார். எங்களுக்கு அப்படியே மெய் சிலிர்த்துவிட்டது. எவ்வளவு பெரியவங்க. நம்மகிட்ட போய் இப்படி பேசுறாங்களேன்னு..!?

மறுபடியும் சென்னைக்கு ஓடி வந்து அந்த ரிக்கார்டரை தேடிப் பிடிச்சு அந்தப் பாடலைக் கண்டுபிடிச்சு அந்த இசையை பி.ஜி.எம்.மா சேர்த்து மறுபடியும் அதை ரிக்கார்ட் செஞ்சு மதுரைல இருந்த அம்மாகிட்ட வந்து காட்டினோம்.

பார்த்தவுடன் சந்தோஷப்பட்டாங்க. “குட்.. பரவாயில்லையே.. கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க.. இப்போ ரொம்ப நல்லாயிருக்கு..” என்று பாராட்டினார்கள்.

இந்த அளவுக்கு கதை, திரைக்கதை, இசை, காட்சியமைப்பு என்று எல்லாவற்றிலும் அம்மா தேர்ந்தவராக இருந்தார்..” என்று நினைவு கூர்ந்தார் இயக்குநர் கா.பரத்.

- Advertisement -

Read more

Local News