இசை உலகின் ஜாம்பவானாக வலம் வருபவர் ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர் ரகுமான். திரையுலகில் அவர் முதன்முதலில் அறிமுகமானது தமிழ் சினிமாவில் தான். அதுவும் பலரின் ‘கனவு இயக்குநராக’ இருந்து வரும் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் தான். 1992ம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படத்தை “இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்து இருந்தது.
ரோஜா படத்திற்கான இசையமைப்பாளர் தேடலில் இளம் இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் மணிரத்னத்திற்கு அறிமுகமாகிறார். அவரின் இசையும், தாளமும் அவருக்கு பிடித்துப்போகவே, அவருடனான கூட்டணியை இன்றளவும் தொடர்ந்து வருகிறார் மணிரத்னம். அப்போதும் எப்போதும் பணிவும் பக்குவமும் கொண்ட ஏ.ஆர் ரகுமானை ரோஜா பட பாடல் வெளியிட்டு விழா மேடையில் அறிமுகம் செய்து வைத்தார் பாலச்சந்தர். அவரும் தனக்கே உரித்தான பணிவுடன் புன்னையை தவழ விடுகிறார். அந்த விழா மேடையில் பாலசந்தர் ரகுமான் குறித்தும், அவரது இசை குறித்தும் புகழ்ந்து தள்ளுகிறார்.
“ஒரு புத்தம்புது இசையமைப்பாளரை இங்கு நான் அறிமுகம் செய்வதில் பெருமையடைகிறேன். ஏ.ஆர் ரகுமான் என்கின்ற அந்த புத்தம்புதிய இசை மலரை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன். அவர் யாருன்னா, சின்ன ஒரு 50, 60 வயதிருக்கும். ஒரு நல்ல ஆஜானபாகுவான 6 அடி உயரத்திற்கு இருப்பவர். இவர் இத்தன நாள் எங்க காணாம போயிட்டுருன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். 6 அடிக்கு இருப்பவரை எப்படி மிஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம். எல்லோருமே மிஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம், மணி மட்டும் இவர எப்படி கண்டுபுடிச்சாரு? என யோசித்தேன்.
அந்த அற்புதமான கலைஞனை எனக்கு அறிமுக பண்ணி வைத்தார் மணிரத்னம் அவர்கள். அதைப் பற்றி நான் அதிகம் சொல்லக்கூடாது. “the proof of the pudding is in the eating” (புட்டுக்கு ஆதாரம் சாப்பிடுவதில் தான் உள்ளது) என்று சொல்வார்கள். அதனால, அவரது ஒரு பாடலை நீங்களே பார்த்து விட்டீர்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக இருப்பதை பார்த்து விட்டீர்கள். மிச்ச பாடல்களையெல்லாம், நிஜமாகவே நீங்கள் சோற்றைப் பதம் பார்க்கும்போது இந்தப் பாடல்கள் அங்கே போடப்படும். மிஸ்டர் ஏ.ஆர் ரகுமான் அவர்கள்.” என்று கூறியபடி விழா மேடையில் அறிமுகம் செய்து வைக்கிறார் பாலச்சந்தர்.
இதன்பின்னர் பாலச்சந்தர், “இவர் தான் நான் சொன்ன அந்த பெரியவர். ஒரு ஆஜானபாகுவான பெரிய மனிதர்.” என்று கூறி ரகுமானுக்கு பொன்னாடையை போற்றுகிறார்.