Tuesday, November 19, 2024

சினிமா டூ அரசியல்: கேப்டன் கடந்து வந்த பாதை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிச.28) காலமானார். இன்று அதிகாலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், சினிமாவின் வாய்ப்பு தேடுவதற்காக விஜய்ராஜ் என்று தனக்கு பெயர் சூட்டிக் கொண்டார். மதுரை மாகாளிபட்டியில் தனது அப்பாவின் அரிசி ஆலையைக் கவனித்துக்கொண்ட அவர், சினிமா வாய்ப்பு தேடுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார்.

ரஜினியை போன்று ஹேர்ஸ்டைலும் முகவெட்டும் கொண்ட விஜயகாந்த் ரஜினிக்கு தம்பியாக ’என் கேள்விக்கு என்ன பதில்’ என்கிற படத்தில் தான் முதன்முதலில் 101 ரூபாய் முன்பணம் வாங்கிக்கொண்டு நடித்தார். தொடர்ந்து எம்.ஏ.காஜா இயக்கிய ‘இனிக்கும் இளமை’ படத்தில் அவருக்கு வில்லன் வேடம் கிடைத்தது. விஜய்ராஜ், விஜயகாந்தாக மாறியது இந்த படத்திலிருந்துதான்.

கதாநாயகனாக இரண்டாவது படம் ‘அகல் விளக்கு’. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, மேக்கப் எல்லாம் போட்டுவிட்டு அதிகாலை முதலே ஹீரோயினுக்காக காத்திருந்த விஜயகாந்த், காலை உணவு சாப்பிட எழுந்தபோது, அவரை தடுத்த படக்குழுவினர் மதியம் வரை காத்திருக்க வைத்துவிட்டனர். இதன் காரணமாகவே படப்பிடிப்பில் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்றும், தான் சாப்பிடுவம் அதே உணவையே கடைநிலை பணியாளர்கள் வரை சாப்பிட வேண்டும் என்கிற முறையை கொண்டு வந்ததாக பின்னாட்களில் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் தெரிவித்தார்.

விஜய்காந்த் நடித்த முதல் ஐந்து படங்கள் கைகொடுக்காத நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் சூப்பர் ஹிட் ஆனது. இதன் பிறகு விஜயகாந்துக்கு தொடர்ந்து ஏறுமுகம்தான். கருப்பு நிறத்தை வைத்து அவரை அவமானப்படுத்திய பல இயக்குநர்கள் அவரது ஆபீஸ் வாசலில் கால்ஷீட்டுக்காகக் காத்துக் கிடந்த நிலை உருவானது.

சினிமாவில் அவருக்காகச் சிந்தித்தவர், கதை கேட்டவர், மேனேஜராக இருந்தவர் எல்லாம் அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். சினிமா தாண்டி, ஏழை எளிய மக்களுக்கு உதவுவதையும் விஜயகாந்த் தொடர்ந்து செய்து வந்தார். தன்னை தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாத மனம் படைத்தவர் என்று அவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் பலரும் இன்று வரை சொல்வதை பார்க்கமுடியும்.

விஜயகாந்த் நடித்த ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘உழவர் மகன்’, ‘புலன் விசாரணை’ ஆகியவை வெள்ளி விழா கண்டன. ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே தனக்கென ஒரு பாணியை உருவாக்கி இருவருக்கும் கடுமையான டஃப் கொடுத்தவர் விஜயகாந்த். ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் அனைவருக்கும் 100வது படம் சறுக்கியபோது, விஜயகாந்தின் 100வது படம் ’கேப்டன் பிரபாகரன்’ பெரும் ஹிட்டடித்தது.

படப்பிடிப்பு தளங்களில் ஹீரோவுக்கு என்ன சாப்பாடோ அதுவே லைட்மேன் உள்ளிட்ட கடைநிலை பணியாளர்களுக்கு தரப்பட வேண்டும் என்ற திட்டத்தை தனது படங்களின் படப்பிடிப்பின்போது கொண்டு வந்தவர். அது மட்டுமின்றி பணியாளர்கள் அனைவருடனும் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.

153-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியான நடிகராக வலம் வந்தார். ‘செந்தூரப்பூவே’ படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விஜயகாந்த், தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நட்சத்திர கலைவிழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதுவரை இருந்த நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார். மேலும் நலிந்த கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்தார். நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

2002-ம் ஆண்டு காவிரி பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தார்.

இந்தி எதிர்ப்பு, ஈழத் தமிழர் விடுதலை உள்ளிட்ட விஷயங்கள் அதீத ஈடுபாடு கொண்ட விஜயகாந்த் விடுதலை புலிகள் தலைவர் மீது கொண்ட பேரன்பால் தன் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். 1984-ம் ஆண்டு ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து நடிகர், நடிகைகளுடன் உண்ணாவிரதம் நடத்தி, அப்போதைய தமிழக ஆளுநரிடம் மனு அளித்தார்.

2000ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றதுக்கென தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார். 2001ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பலரும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதுவே அவரது அரசியல் வருகைக்கு அஸ்திவாரமாக அமைந்தது.

அதன் பிறகு வெளியான திரைப்படங்களில் தனது கட்சிக் கொடியை இடம்பெறச் செய்ததுடன், அரசியல் ரீதியான வசனங்களையும் இடம்பெறச் செய்தார் விஜயகாந்த். 2005ஆம் ஆண்டு மதுரையில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தி தனது தேமுதிக கட்சியை அதிகாரபூர்வமாக தொடங்கினார்.

கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டவர், விருதாச்சலம் தொகுதியில் அபார வெற்றிபெற்றார். அதுவரை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு வந்த விஜயகாந்த், 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வென்று எதிர்கட்சி தலைவர் நாற்காலியில் அமர்ந்தார்.

விஜயகாந்துக்கு அரசியலில் ஆர்வம் இருந்த அளவுக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. மிகவும் சுறுசுறுப்பாக, மேடைப்பேச்சுகளின்போது அனல் பறக்கவிட்ட விஜயகாந்த்தின் உடல்நிலையில் மெல்ல மெல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கின. எதிர்கட்சிகளை நோக்கி சிங்கம் போல மேடையில் கர்ஜித்த அவரது தடுமாற்றத்தைக் கண்டு தொண்டர்களும், ரசிகர்களும் கலங்கிப் போனார்கள்.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற போது விஜயகாந்தால் முன்பு போல பிரச்சாரக் கூட்டங்களில் பரபரப்பாக இயங்க முடியவில்லை. அவரது முகத்திலும் உடலிலும் சோர்வு தெரிந்தது. 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து சந்தித்த தேமுதிக, போட்டியிட்ட 104 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று நான்கு தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட தேமுதிக அனைத்திலும் படுதோல்வியடைந்தது.

விஜயகாந்தின் உடல்நிலையுடன், ஒரு காலத்தில் எதிர்கட்சியாக இருந்த தேமுதிகவும் இப்படியாக படிப்படியாக தேய்ந்தது.

அரசியலில் இறங்கும் முன்பு இலவச திருமண மண்டபங்கள், ஏராளமான ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமணம், கேப்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி, லிட்டில் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நன்கொடை, இலவச கணினிப் பயிற்சி மையம் என எண்ணிடலங்கா உதவிகளைச் செய்தவர். சுனாமி பேரிடர், குஜராத் பூகம்பம், கார்கில் போர் உள்ளிட்ட துயரங்களின்போது ஏராளமான நிவாரண உதவிகளை அனுப்பி உதவியர் விஜயகாந்த்.

சினிமாவில் தனக்கென ஒரு பாதையையும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி, அரசியலில் தனி முத்திரை பதித்த விஜயகாந்த்தின் மறைவு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்துக்குமே பேரிழப்பு.

 

- Advertisement -

Read more

Local News