இயக்குநர் தம்பதிகளான புஸ்கர் மற்றும் காயத்ரி இருவரும் இணைந்து எழுதி உருவாக்கியிருக்கும் வெப் சீரீஸ் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’.
வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பிரம்மா மற்றும் அனுசரண்.எம் ஆகியோரின் இயக்கத்தில் அமேஸான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இந்த ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ வெப் சீரீஸ் வெளியாகவுள்ளது.
திறமையான நடிகர்களான கதிர், ஐஸ்வர்யா இராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பிரபல இயக்குநருமான நடிகருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இந்த வெப் சீரீஸில் நடித்துள்ளனர்.
முதல்முறையாக உலகளவில் மிக அதிக எண்ணிக்கையில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த வெப் சீரீஸ் அமேஸான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் சீரிஸ் என்ற பெருமையைப் பெறுகிறது.
ஹிந்தி, கன்னடா, மலையாளம், தெலுகு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மற்றும் ஃப்ரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ஜாப்பனிஸ், போலிஸ், போர்ச்சுகீஸ், கேஸ்ட்லியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ், அராபிக் மற்றும் டர்க்கீஸ் போன்ற அந்நிய மொழிகளிலும் இது ஒளிபரப்பாகிறது. இதற்கும் கூடுதலாக பல அந்நிய மொழிகளில் சப்-டைட்டில்ஸ் உடன் இந்த சீரிஸ்-ஐ பார்த்து ரசிக்கலாம்.
8 எபிசோடுகளைக் கொண்ட இந்த புலன் விசாரணை கதையானது, ஒரு பள்ளிச் சிறுமி காணாமல் போவதைத் தொடர்ந்து தொழிலகங்கள் நிறைந்த ஒரு சிறு நகரத்தில் பல சீர்குலைவை விளைவிக்கிற நிகழ்வுகள் வழியாக பல திருப்பங்களும் எதிர்பாரா சம்பவங்களும் நிறைந்த பாதையில் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.
இந்த வெப் சீரீஸின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் கிண்டி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் கிரியேட்டிவ் இயக்குநர்களான புஷ்கர்-காயத்ரி, இயக்குநர்களான பிரம்மா, அனு சரண், நடிகர் பார்த்திபன், நடிகைகள் ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சந்தானபாரதி மற்றும் படத்தில் பங்கு கொண்ட தொழில் நுட்பக் கலைஞர்களுடன் அமேஸான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசும்போது, “இந்தக் கதையோடு நீண்ட நாட்கள் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம் அதையே சுவாசித்திருக்கிறோம்; இந்த அற்புதமான அனுபவத்தில் பார்வையாளர்களும் பங்கு வகிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது சிறப்பான உணர்வைத் தருகிறது.
எனது கடந்த 32 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் சௌகரியமான முறையில் ஒரு படைப்பில் பணியாற்றி இருக்கிறேன் என்றால், அது இந்த சுழல் தொடரில்தான். நான் முதன் முதலில் நடிக்கும் வலைத்தள தொடர் இது.
படப்பிடிப்பு நெருங்கும் தருணத்தில் என்னைத் தொடர்பு கொண்டு புஷ்கர் & காயத்ரி பேசினார்கள். அவர்களது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்தத் தொடரின் கதையை கேட்டவுடன் அதில் ஒரு ஜீவன் இருந்ததை உணர்ந்தேன்.
இது போன்ற சீரீஸ் மூலம் எனது டிஜிட்டல் அறிமுகத்தை செய்திருப்பது, அதுவும் சிறப்பான நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளோடு சேர்ந்து செய்திருப்பது உண்மையிலேயே எனக்குப் புத்துணர்ச்சி தரும் அனுபவமாகும்.
நம்முடைய கலாச்சாரத்தில் ஒரு புராணக் கதை உண்டு. ஞானப் பழம் யாருக்கு என்ற அநத கதையில், ஞானப் பழத்திற்காக முருகன் உலகமெல்லாம் சுற்ற சென்று விடுவார். விநாயகர் அருகிலிருக்கும் அப்பா, அம்மாவை சுற்றிவிட்டு, ஞானப் பழத்தைப் பெற்று விடுவார். அந்த விநாயகர் கதைதான் இந்த அமேசான் நிறுவனத்தின் கதை.
அந்தக் காலத்தில் சிவாஜியைவிட மிகச் சிறந்த நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய நடிப்பு பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் போனது. ஏனெனில் நடிகர்களென்றால் ஒவ்வொரு ஊர், ஊராகச் சென்று நடிக்க வேண்டும். சென்னையில் அழகாக நடிக்க வேண்டும். பிறகு கோயம்புத்தூருக்குச் சென்று மீண்டும் அதே போல் அழகாக நடிக்க வேண்டும். பிறகு மும்பைக்குச் சென்று அதே போல அழகாக நடிக்க வேண்டும்.
ஆனால் அமேசானில்.. ஒரே ஒரு தொடரில் நடித்தால், உலகத்தில் உள்ள 240 நாடுகளில் ஒரே நேரத்தில், இந்த தொடரைப் பார்க்க முடியுமென்றால், இதுதான் அமேசானின் ஞானப்பழம். நம்முடைய படைப்பை உலக அளவில் ஒரே தருணத்தில் பார்த்து ரசிக்கிறார்கள் என்றால் அது மட்டற்ற மகிழ்ச்சிதானே..?!
ரெண்டு பொண்டாட்டியுடன் குடும்பம் நடத்துவது கடினம் என்பார்கள். ஆனால் இங்கு இரண்டு புருஷன்களுடன் குடும்பம் நடத்திய அனுபவம் எனக்கேற்பட்டது. ஆனால் வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ஒரே ஆள் இரட்டை வேடம் போட்டது போல் இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களையும், சந்தானபாரதி போன்ற கலைஞர்களையும் மனதார பாராட்டுகிறேன்.
இந்தத் தொடரில் ‘சண்முகம்’ என்ற கதாபாத்திரத்தில் தொழிற்சங்க தலைவராகவும், ஒரு பெண்ணின் தகப்பனாராகவும் நடித்திருக்கிறேன். என் மகள் மீது வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்த தெரியாது. எனக்கு நடிக்க தெரியாது அதனால் என்னுடைய நடிப்பு நன்றாக இருக்கும்.” என்றார்.