கடந்த 2௦19-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ‘ஜீவி’ படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் விஜே கோபிநாத்தே இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ‘ஆஹா’ தமிழ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “முன்பெல்லாம் இயக்குநர்கள்தான் ஹீரோக்களை உருவாக்குவார்கள். ஆனால் இப்போது கேப்டன் ஆப் தி ஷிப் என்றால் அது ஹீரோ என்று மாறிவிட்டது. ஹீரோ கை காட்டுபவர்தான் இயக்குநர் என்கிற நிலை உருவாகிவிட்டது. அதேசமயம் நடிகர் வெற்றி, வி.ஜே.கோபிநாத்தை இயக்குநராகத் தேர்ந்தெடுத்து, அவர் மீது வைத்த நம்பிக்கையை காட்டிவிட்டார்.

இன்று சினிமாவை பற்றிய புரிதல் இல்லாமல் பலர் இருக்கிறார்கள். திரைக்கதையில் உருவாக்கப்படும் ஒரு காட்சியைக்கூட ஏதோ எடிட்டர் செய்தது போன்று நினைத்துக் கொள்கிறார்கள். இயக்குநர் கோபிநாத்துக்கு சுரேஷ் காமாட்சி கொடுத்த விளக்கம் எனக்கு சமாதானம் ஆகவில்லை. ஓடிடி தளத்தில் வெளியிடுவது பாதுகாப்பானதுதான் என்றாலும் தியேட்டரில் வெளியாகி விட்டு பின்னர் ஓடிடிக்கு வந்தால் நன்றாக இருக்கும்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பொருத்தவரை எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர். எனது மகன் சாந்தனுவின் படத்திற்கு ராமநாதபுரம் படப்பிடிப்பின்போது ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அந்த சமயத்தில் சுரேஷ் காமாட்சியை அணுகியபோது தன்னுடைய வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடன் ராமநாதபுரத்திற்கு நேரில் வந்து மூன்று நாட்கள் கூடவே இருந்து அதை சரி செய்து கொடுத்தார். இவர் போன்றவர்களை சினிமாவில் பார்ப்பது அரிது” என்று கூறினார்.