கன்னட திரைப்பட நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானதும், பெரும் வரவேற்பைப் பெற்றது. ரூ.16 கோடி செலவில் உருவான இப்படம், ரூ.400 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

காந்தாரா திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி மூன்று விதமான தோற்றங்களில் நடித்திருந்தார். இதில் அவர் ஆடிய பஞ்சுருளி தெய்வக் கதாபாத்திரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.இந்தப் பெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘காந்தாரா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘காந்தாரா’ படக்குழு இதனை முதல் பாகமாக அறிவித்ததோடு, அதன் தலைப்பை ‘காந்தாரா: சாப்டர் 1’ என வைத்துள்ளனர். இதில் ரிஷப் ஷெட்டியுடன் நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். ஹோம்பளே பிலிம்ஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டிக்கு இணையாக நடிகர் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைத்தவர் அஜேஷ் லோக்நாத். இப்படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழு அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றையும் வெளியிட்டது.இதனைத் தொடர்ந்து, ‘காந்தாரா’ திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தையும் உருவாக்குவதற்கான திட்டத்தில் இயக்குநர் ரிஷப் ஷெட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், ‘காந்தாரா’ முதல் பாகத்திற்குப் பிறகு என்ன நடந்தது என்பதையே மூன்றாம் பாகத்தில் கூற உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திட ஜூனியர் என்.டி.ஆருடன் ரிஷப் ஷெட்டி பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை ஜூனியர் என்.டி.ஆர் தரப்பும் மறுக்கவில்லை என்பதால் இது உண்மைதான் என்று கருதப்படுகிறது. மேலும் சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் தனது குடும்பத்தினருடன் கர்நாடகா மாநிலத்திற்கு வந்தபோது, அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரிஷப் ஷெட்டியே செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.