Friday, April 12, 2024

“அண்ணாத்த’ படம் மட்டுமே வெளியானால் போதுமா?” – ‘எனிமி’ பட தயாரிப்பாளரின் கொதிப்பான பேச்சு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“வரும் தீபாவளியன்று ‘அண்ணாத்த’  திரைப்படம் வெளியாவதால் தான் தயாரித்த எனிமி’ படத்திற்குத் தியேட்டர்கள் கிடைக்கவில்லை” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான வினோத் புகார் கூறியுள்ளார்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி தினத்தில் திரைக்கு வர உள்ளது. நயன்தாரா.

மீனா ,கீர்த்தி சுரேஷ், குஷ்பூ என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை விநியோகம் செய்யும் பொறுப்பை கவனித்து வருகிறது.

இதன் காரணமாக தீபாவளி தினத்தில் வெளியாகும் பிற திரைப்படங்களுக்கு போதிய எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருக்கும் அனைத்து மால் தியேட்டர்களிலும் அனைத்துத் தியேட்டர்களிலும் ‘அண்ணாத்த’ படத்தை மட்டுமே வெளியிடும்வகையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதனால் மற்ற படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழக முதல்வர் ஸ்டாலினின் குடும்ப நிறுவனம் என்பதால் தியேட்டர்காரர்கள் கண்ணை மூடிக் கொண்டு அவர்கள் சொன்னதை மட்டுமே கேட்கிறார்களாம்.

இதனால் ‘அண்ணாத்த’ படத்தோடு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர் விஷாலின் ‘எனிமி’ படத்திற்குத் தியேட்டர்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ‘எனிமி’ படத்தின் தயாரிப்பாளரான வினோத் தான் உறுப்பினராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஒரு ஆடியோ பதிவொன்றை அனுப்பியுள்ளார்.

அந்த ஆடியோ பதிவில், “அண்ணாத்த திரைப்படம் அதிக திரையரங்குகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் தனது திரைப்படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை.

முக்கியமான விடுமுறை தினமான தீபாவளியன்று ‘அண்ணாத்த’ திரைப்படம் மட்டுமே வெளியானால் அது ரசிகர்களுக்கு போதுமானதாக இருக்காது. மேலும் அது ஒருதலைப்பட்சமான முடிவு. ஒரு சாரார் மட்டுமே ஆதிக்கம் செலுத்தக் கூடியது. தமிழகத்தில் மொத்தமுள்ள 900 திரையரங்குகளில் 250 திரையரங்குகளையாவது தங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும்…” என்று வினோத் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  ‘அண்ணாத்த’ படத்திற்குக் கிடைத்த தியேட்டர்கள் லிஸ்ட்டை பார்த்துவிட்டு போட்டியிலிருந்து விலகியுள்ளது.

இப்போது எனிமி’ படத்தையும் இதேபோல் ஒதுக்கித் தள்ளிவிட்டு முழுக்க, முழுக்க ‘அண்ணாத்த’ படமே தியேட்டர்களில் ஆதிக்கத்தைச் செலுத்த திட்டமிட்டு வருவதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News