தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிவரும் சூர்யா, தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து ஏற்கனவே 2D என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கு கூடுதலாக, அவரது உறவினர்களும் தனித்தனியாக தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். அந்த நிறுவனங்களிலும் சூர்யா குடும்பத்தினரின் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்திய காலங்களில், சூர்யா மற்றும் கார்த்தி, பெரும்பாலும் தங்களது குடும்ப நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில்தான் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், சூர்யா புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ழகரம் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் அந்த நிறுவனம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் முதல் தயாரிப்பாக மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கும் படம், இரண்டாவது தயாரிப்பாக பா. ரஞ்சித் இயக்கும் படம் ஆகியவை உருவாக உள்ளன. இந்த இரண்டு படங்களிலும் சூர்யா தான் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.
தற்போது, தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவின் 46வது படம் உருவாகி வருகிறது. அந்தப் படம் முடிந்ததும், மேற்கண்ட இரண்டு படங்களும் அடுத்தடுத்து தொடங்கும் எனத் தெரிகிறது. இதே நேரத்தில், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வாடிவாசல் எப்போது துவங்கும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.