1990-களில் தமிழ்ச் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் பரபரப்பாக ஓடி நடித்துக் கொண்டிருந்தார்.
இந்தப் பரபரப்பு வாழ்க்கையினாலேயே தமிழில் குறிப்பிடத்தக்க மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதாக கூறியிருக்கிறார் மீனா.
அவர் இது பற்றிப் பேசும்போது, “என் திரையுலக வாழ்க்கையில் நான் சோகமாக நினைக்கும் விஷயம் பல வெற்றிப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை நான் இழந்ததுதான். கால்ஷீட் தேதி குழப்படியினால்தான் நடிக்க முடியாமல் போய்விட்டது.
மலையாளத்தில் மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்த ‘ஹரிகிருஷ்ணன்’ படத்தில் நான்தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. அவர்கள் கேட்ட தேதி கிடைக்காததால் அதில் எனக்குப் பதிலாக ஜூஹி சாவ்லா நடித்தார்.
இதேபோல் ‘படையப்பா’ படத்தில் சவுந்தர்யா வேடத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது. அதுவும் நடிக்க முடியாமல் போனது. ‘வள்ளி’ படத்தில் பிரியா ராமன் கதாபாத்திரத்தில் நான் நடிச்சிருக்கணும். அப்போதும் தேதிகள் இல்லை என்பதால் முடியவில்லை. ‘தேவர் மகன்’ படத்தில் ரேவதி கதாபாத்திரத்தில் சில நாட்கள் நான் நடித்திருந்தேன். ஆனால் அதன் பிறகு கதையை மாற்றுவதாகச் சொல்லி ஆறு மாதங்கள் படம் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியது. அப்போது என்னிடம் கால்ஷீட் இல்லை. அதனால் அதில் ரேவதி நடித்தார். இப்படி நான் இழந்த திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகம்.
ஏதாவது ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குள்ளும் இருக்கு. அது இதுவரையிலும் எந்தவொரு படத்திலும் நான் கல்லூரி மாணவியாக நடிக்கவே இல்லை. இதுவும் எனக்குள் வருத்தமாக உள்ளது. அதேபோல் நான் அடிப்படையில் நல்ல டான்ஸர். ஆனால் என் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற கதாபாத்திரம் எனக்கு இதுவரையிலும் கிடைக்கவில்லை.
முன்பு மாதிரி ரசிகர்கள் இப்போது இல்லை. நம்முடைய இமேஜை பார்த்து ரசிக்கவில்லை. கேரக்டரை பார்த்து ரசிக்கிறார்கள். இதனால் இனி வரும் படங்களில் வில்லியாக, வித்தியாசமான நெகட்டிவ் அம்சம் கொண்ட வேடங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்..” என்று சொல்லியிருக்கிறார் மீனா.