இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் எஸ்.ஜானகிதான் ஏராளமான பாடல் பாடியிருக்கிறார். இருவருக்கும் இடையில் அப்படியோர் சகோதர பாசம் உண்டு.
இதற்கான காரணத்தை பத்திரிகையாளர் மணி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்:
“அந்த காலகட்டத்தில் இளையராஜா பல படங்களுக்கு கதை, திரைக்கதை அமைத்தவரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலத்தை சந்தித்து வாய்ப்பு கேட்டார். அப்போது சிலருடன் இணைந்து அன்னக்கிளி படத்தை பஞ்சு, தயாரிக்க திட்டமிட்டிருந்தார். அந்த படத்திற்கு ராஜாவை இசையமைக்க வைக்கலாம் என அவர் முடிவெடுத்தார்.
ஆனால், அப்படத்தை அவருடன் இணைந்து தயாரித்த கே.எம்.சுப்பு என்பவருக்கு ராஜா மீது நம்பிக்கை வரவில்லை. எனவே, ஒரு பாடலை அவர் தனது குழுவினரிடன் இசையமைத்து காட்ட வேண்டும். திருப்தி என்றால் இவரே இசையமைக்கட்டும் என்றார்.
எனவே, இசைக்குழுவினரை ஒரு திருமண மண்டபத்திற்கு வரவழைத்து ஒரு பாடலை வாசித்து காட்டினார் இளையராஜா. இதையடுத்து அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதில் ஆச்சர்யம் என்னவெனில் அப்போது பிரபல பாடகியாக இருந்த எஸ்.ஜானகியும் அங்கு வந்து குழுவினரோடு அந்த பாடலை பாடி காட்டியுள்ளார். அப்போதே ஜானகி பிரபலம். ஆனாலும் இளையராஜாவுக்காக வந்தார். அதற்கு முன் ஒரு இசையமைப்பாளரை சோதிப்பதற்காகவெல்லாம் யாரிடமும் சென்று அவர் பாடியது கிடையாது.
இந்த சம்பவம்தான், ஜானகி மீது இளையராஜாவுக்கு தீராத பாசத்தை ஏற்படுத்தியது” என்றார் மணி.