சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடித்துள்ள படம், ‘வட்டார வழக்கு’. கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வெளியிடுகிறார்.
வரும் 29-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், கண்ணுச்சாமி ராமச்சந்திரன் கூறும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றிய 80 சதவிகிதம் பேர் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்துள்ளனர். சிறு சிறு விஷயங்களுக்குக் கூட அவர்களது சொந்த காசை செலவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். பின்னணி இசையை நம்பி இருக்கக்கூடிய படம் இது. இந்தக் கதைக்கு ராஜா சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். படத்தைப் பார்த்துவிட்டு அவர் சம்மதம் சொன்னார். ஒரு சின்ன படத்துக்கான அடிப்படைத் தேவைக்கான செலவு மட்டும்தான் ராஜா சார் கேட்டிருந்தார்.
ஆனால், அவர் கேட்டதில் 60 சதவிகிதம்தான் கொடுக்க முடிந்தது. 40 சதவிகித பணம் இல்லை. அவர் அதைப் பொருட்படுத்தாமல், இசை அமைத்தார். அவர் காலில் விழுந்து விட்டேன். 12 நாட்கள் ஒரு தியானம் போல, இதன் பின்னணி இசையைச் செய்து கொடுத்தார்” என்றார்.